Page Loader
புத்தாண்டு தினத்தன்று ஜப்பானில் 155 நிலநடுக்கங்கள்: 48 பேர் பலி, ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்

புத்தாண்டு தினத்தன்று ஜப்பானில் 155 நிலநடுக்கங்கள்: 48 பேர் பலி, ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்

எழுதியவர் Sindhuja SM
Jan 02, 2024
03:17 pm

செய்தி முன்னோட்டம்

2024 ஆம் ஆண்டின் முதல் நாளான நேற்று ஜப்பானில் ஏற்பட்ட தொடர்ச்சியான பூகம்பங்களால் குறைந்தது 48 பேர் உயிரிழந்தனர். நேற்று முதல் ஜப்பானில் 155 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. 7.6 ரிக்டர் அளவுடன் ஆரம்பித்த இந்த தொடர் நிலநடுக்கங்களில் 6க்கும் அதிகமான பெரும் நிலநடுக்கங்களும் அடங்கும். ஆரம்ப நிலநடுக்கம் ஏற்பட்ட உடனேயே அதிகாரிகள் சுனாமி எச்சரிக்கைகளை விடுத்தனர். அதன் பிறகு, 5 அடி உயர அலைகள் ஜப்பானை தாக்கியது. மேலும், இந்த பேரழிவால் ஏறக்குறைய 33,000 குடும்பங்கள் மின்சாரம் இல்லாமல் தவித்து வருகின்றன. முக்கிய நெடுஞ்சாலைகள் உட்பட நாடு முழுவதும் பல முக்கிய வழித்தடங்கள் செயல்படவில்லை. இதனால் மருத்துவர்கள் மற்றும் இராணுவ வீரர்கள் மீட்பு சேவைகளில் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.

ஜட்ட்வ்க்ன்

சேதமடைந்த சாலைகள் காரணமாக மீட்பு நடவடிக்கைகள் பாதிப்பு 

பூகம்பத்தின் மையப்பகுதிக்கு அருகில் உள்ள வாஜிமா நகரில்48 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது. தேசிய போலீஸ் ஏஜென்சி ஆறு பேர் இறந்ததை உறுதிப்படுத்தியுள்ளது. நிலநடுக்கங்களால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியான ஜப்பானின் நோட்டோ தீபகற்பத்திற்கு ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். ஆனால், சேதமடைந்த மற்றும் தடைசெய்யப்பட்ட சாலைகள் காரணமாக மீட்பு நடவடிக்கைகள் தடைபட்டுள்ளன ஓடுபாதையில் விரிசல் விழுந்ததால் அப்பகுதியின் விமான நிலையங்களில் ஒன்று மூடப்பட்டுள்ளது. நான்கு அதிவேக நெடுஞ்சாலைகள், இரண்டு அதிவேக ரயில் சேவைகள், 34 உள்ளூர் ரயில் பாதைகள் மற்றும் 16 படகுப் பாதைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக ஜப்பானின் போக்குவரத்துறை தெரிவித்துள்ளது. அடுத்து வரும் நாட்களில் மேலும் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்படலாம் என்று ஜப்பான் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.