Loading...
நேபாளத்தில் 6 இந்திய மலையேற்ற பயணிகள் மாயம்: கடும் பனியில் ராணுவம் தீவிர தேடுதல்
நேபாள ஷே-போக்ஸுண்டோ ஏரி பனிப்பொழிவில் 2 பெண்கள் உட்பட 6 இந்தியர்கள் மாயம்

நேபாளத்தில் 6 இந்திய மலையேற்ற பயணிகள் மாயம்: கடும் பனியில் ராணுவம் தீவிர தேடுதல்

எழுதியவர் Vasuki
Nov 01, 2026
03:11 pm

செய்தி முன்னோட்டம்

நேபாள நாட்டின் மிக உயரமான மற்றும் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றான ஷே-போக்ஸுண்டோ ஏரிக்கு பனிபடர்ந்த மலைப்பாதைகள் வழியாக மலையேற்றம் சென்ற இரண்டு பெண்கள் உட்பட ஆறு இந்தியச் சுற்றுலாப் பயணிகள், திடீரென கொட்டித் தீர்த்த கடும் பனிப்பொழிவு மற்றும் பனிப்புயலில் சிக்கி மாயமாகியுள்ளனர். அவர்களை மீட்க நேபாள ராணுவம் மற்றும் மீட்புக் குழுவினர் தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ள போதிலும், பனி மூட்டம், அடர்ந்த பனிப்பொழிவு மற்றும் செல்போன் தொடர்பு இல்லாத சூழல் காரணமாக மீட்புப் பணிகளில் கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

தொடர்பு துண்டிப்பு

எச்சரிக்கையை மீறி பயணம் 

ஷே-போக்சுண்டோ ஊரக நகராட்சியின் வார்டு 4 மற்றும் 8-க்கு இடைப்பட்ட நுமலா கணவாய் மற்றும் பாக்லா கணவாய் ஆகிய பனி படர்ந்த மலைப்பாதைகளைக் கடந்து டோ பகுதியிலிருந்து ஏரியை நோக்கித் திரும்பிய போது, இந்த ஆறு இந்தியர்களும் வழியிலேயே மாயமாகியுள்ளனர்.

இதுகுறித்து டோல்பா மாவட்ட முதன்மை அதிகாரி ஜூனு ஹமால் கூறுகையில், "கடுமையான பனிப்பொழிவு மற்றும் மோசமான வானிலை நிலவுவதால் மேலே செல்ல வேண்டாம் என உள்ளூர் வழிகாட்டிகளும் பொதுமக்களும் எச்சரித்த போதிலும், அதனைப் பொருட்படுத்தாமல் அவர்கள் தங்களது பயணத்தைத் தொடர்ந்துள்ளனர்" எனத் தெரிவித்தார்.

மலைக் கணவாய்களில் செல்போன் நெட்வொர்க் சிக்னல் முற்றிலும் இல்லாத காரணத்தால், அவர்களது தற்போதைய இருப்பிடம் மற்றும் நிலவரம் குறித்து எந்தவொரு தகவலையும் பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.

ராணுவ ஹெலிகாப்டர் மீட்பு 

244 சுற்றுலா பயணிகள் தவிப்பு

மாயமான இந்தியர்களை கண்டறியும் பணிக்காக நேபாள ராணுவத்தின் பிரத்யேகப் பிரிவு வீரர்கள் தரைவழியாக அனுப்பப்பட்டுள்ளதோடு, வானிலை சீரடைந்தவுடன் வான்வழித் தேடுதலைத் தொடங்க ஹெலிகாப்டரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

இடைவிடாது கொட்டும் அடர்ந்த பனிப்பொழிவு மற்றும் பனி மூட்டம் காரணமாக மீட்புப் பணிகளில் பெரும் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக டோல்பா துணைக் காவல் கண்காணிப்பாளர் அனில் ராஜ் கிரி தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, அப்பர் டோல்பா பகுதியில் இந்தியர்கள் உள்ளிட்ட சார்க் நாடுகளைச் சேர்ந்த 44 பேர், பிற வெளிநாட்டினர் 51 பேர் மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த 149 பேர் என மொத்தம் 244 சுற்றுலாப் பயணிகள் முகாமிட்டுள்ளதால், வானிலை சரியாகும் வரை ஆபத்தான கணவாய் பாதைகளுக்குச் செல்லாமல் பாதுகாப்பான இடங்களில் தங்கியிருக்குமாறு மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.

ADVERTISEMENT