பிரான்சில் முதுகலை படிக்கும் இந்திய மாணவர்களுக்கு 5 ஆண்டு பணி விசா வழங்க ஏற்பாடு
பிரான்சில் முதுகலை படிக்கும் இந்திய மாணவர்கள் தங்கள் படிப்பை முடித்ததும் 2 ஆண்டுகளுக்கு மட்டுமே அவர்களுக்கு பணி விசா வழங்கப்பட்டு வந்த நிலையில், அது 5 ஆண்டுகளாக நீட்டிக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் அழைப்பு விடுத்ததை அடுத்து, 2 நாட்கள் பயணமாக பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில், பாரீஸ் நகரில் உள்ள 'லா சீன் மியூசிகேல்' என்ற இடத்தில் பிரான்சில் வாழும் இந்திய சமூகத்தினரிடையே உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, "முன்பு பிரான்ஸ், இந்திய மாணவர்களுக்கு 2 ஆண்டு பணி விசா வழங்கியது, இனி, இந்திய மாணவர்களுக்கு 5 ஆண்டு பணி விசா வழங்கப்படும்" என்று அறிவித்தார்.
சர்வதேச மாணவர்களுக்கான முதல் ஐந்து இடங்களில் பிரான்ஸும் உள்ளது
இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் சமீபத்திய தரவுகளின்படி, கடந்த மூன்று ஆண்டுகளாக பிரான்ஸ் நாட்டிற்குச் செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2022 ஆம் ஆண்டில், 6,000திற்கும் மேற்பட்ட வெளிநாட்டில் படிக்க விரும்பும் மாணவர்கள் பிரான்ஸைத் தேர்ந்தெடுத்துள்ளனர். அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு அடுத்தபடியாக சர்வதேச மாணவர்களுக்கான முதல் ஐந்து இடங்களில் பிரான்ஸும் உள்ளது. பிரான்ஸ் வழங்கும் குறைவான கல்விக் கட்டணம், அதிக உதவித்தொகை வாய்ப்புகள் மற்றும் தரமான கல்வி ஆகியவை ஆண்டுதோறும் பல சர்வதேச மாணவர்களை பிரான்ஸுக்கு ஈர்க்கிறது. 2021-22ஆம் ஆண்டில் 4 மில்லியனுக்கும் அதிகமான சர்வதேச மாணவர்கள் பிரான்ஸை தேர்தெடுத்துள்ளனர்.