கிசா பிரமிடுகளுக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்ட 4,300 ஆண்டுகள் பழமையான மம்மி
எகிப்தில் உள்ள தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் நேற்று(ஜன 27) கெய்ரோவின் தெற்கே உள்ள சக்காரா நெக்ரோபோலிஸில் 4,300 ஆண்டுகள் பழமையான மம்மி உட்பட புதிய தொல்பொருள் கண்டுபிடிப்புகளை அறிவித்துள்ளனர். 4,300 ஆண்டுகள் பழமையான மம்மி ஒரு ஃபாரோனிக் கல்லறைக்குள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மம்மி இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதிலேயே பழமையான மற்றும் முழுமையான மம்மியாகும். செய்தியாளர்களிடம் பேசிய அகழ்வாராய்ச்சிக் குழுவின் இயக்குனர் ஜாஹி ஹவாஸ், சக்காராவில் உள்ள படி பிரமிடுக்கு அருகில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஐந்தாவது மற்றும் ஆறாவது வம்சத்தின் கல்லறைகளின் குழுவில் இந்த மம்மி கண்டுபிடிக்கப்பட்டது என்று கூறி இருக்கிறார். அந்த பரந்த இடுகாட்டில் நான்கு கல்லறைகளை கண்டுபிடித்ததாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பல தொல்பொருள் கண்டுபிடிப்புகளை அறிவிக்கும் எகிப்து
அவர்கள் அகழ்வாய்வு செய்த இடத்தில் நிறைய கல்லறைகள் கிடைத்துள்ளதால், அந்த இடத்தில் பெரிய இடுகாடு இருந்திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள். இதில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் மிக முக்கியமான கல்லறை, எகிப்தின் சக்காரா நெக்ரோபோலிஸின், கிசாவை சேர்ந்த க்னும்ட்ஜெடெஃப் என்பவருக்கு சொந்தமானதாகும். இவருக்கு அதிகாரிகளின் ஆய்வாளர், பிரபுக்களின் மேற்பார்வையாளர் மற்றும் ஐந்தாவது வம்சத்தின் கடைசி வாரிசு என்ற பல பட்ட பெயர்கள் உள்ளன. இந்த கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்ட அறிவிப்புக்குப் பிறகு, கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. இந்த கண்காட்சியில் பழைய ராஜ்யத்தின் ஐந்தாவது மற்றும் ஆறாவது வம்சத்தைச் சேர்ந்த பல முக்கியமான தொல்பொருள் கண்டுபிடிப்புகள் வைக்கப்படவுள்ளன. சமீப காலமாக, எகிப்து அதன் சுற்றுலாத் துறைக்கு உயிரூட்டும் வகையில் பல தொல்பொருள் கண்டுபிடிப்புகளை அறிவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.