டிரம்பிற்கு இந்தியா கொடுத்த சைலண்ட் பதிலடி; அமெரிக்கப் பருப்புக்கு 30% வரி; வர்த்தகப் போரில் மிரளும் அமெரிக்க விவசாயிகள்
செய்தி முன்னோட்டம்
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான வர்த்தக உறவில் மீண்டும் ஒரு விரிசல் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியப் பொருட்கள் மீது 50 சதவீத வரி விதித்ததற்குப் பதிலடியாக, இந்தியா தற்போது அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பருப்பு வகைகள் மீது 30 சதவீத வரி விதித்துள்ளது. இந்த விவகாரம் குறித்து அமெரிக்காவின் வடக்கு டகோட்டா மற்றும் மொன்டானா மாநிலங்களைச் சேர்ந்த இரண்டு செனட்டர்கள் அதிபர் டிரம்பிற்கு ஒரு முக்கியக் கடிதத்தை எழுதியுள்ளனர்.
வரி விதிப்பு
சைலண்ட் பதிலடி மற்றும் வரி விதிப்பு
இந்தியா கடந்த ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதி அமெரிக்காவின் மஞ்சள் பட்டாணி மீது 30 சதவீத வரி விதிப்பதாக அறிவித்தது. இது நவம்பர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இந்தியா இதனைப் பெரிதாக விளம்பரப்படுத்தாமல் சைலண்ட் ஆகச் செய்துள்ளது. டொனால்ட் டிரம்பின் வரி விதிப்புகளுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாகவும், இந்திய விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கும் விதமாகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. உலகின் மிகப்பெரிய பருப்பு நுகர்வோர் நாடாக இந்தியா இருப்பதால், இந்த வரி விதிப்பு அமெரிக்க விவசாயிகளைப் பெரிதும் பாதித்துள்ளது.
கோரிக்கை
செனட்டர்களின் கோரிக்கை
செனட்டர்கள் கெவின் கிராமர் மற்றும் ஸ்டீவ் டைன்ஸ் ஆகியோர் எழுதியுள்ள கடிதத்தில், இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் அமெரிக்கப் பருப்பு வகைகள் மீது விதிக்கப்பட்டுள்ள இந்த அநீதியான வரிகளை அகற்ற இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்குமாறு டிரம்பைக் கேட்டுக்கொண்டுள்ளனர். அமெரிக்காவின் பருப்பு உற்பத்தி மாநிலங்களான வடக்கு டகோட்டா மற்றும் மொன்டானாவிற்கு இந்தியா ஒரு முக்கியமான சந்தையாகும். இந்தியாவின் இந்த 30 சதவீத வரி உயர்வால், அமெரிக்கப் பொருட்கள் இந்தியச் சந்தையில் மற்ற நாடுகளுடன் போட்டியிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
விவசாயிகள்
இந்தியாவின் நிலைப்பாடு: விவசாயிகளே முக்கியம்
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகள் இழுபறியாக இருப்பதற்கு இந்தியாவின் விவசாயக் கொள்கையே முக்கியக் காரணமாகும். இந்திய விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் வெளிநாட்டுப் பருப்பு வகைகளுக்குச் சந்தையைத் திறந்துவிட இந்தியா மறுத்து வருகிறது. "இந்திய விவசாயிகள் எங்களது சிவப்புக் கோடு (Red Line)" என்று இந்திய நிபுணர்கள் கூறுகின்றனர். உள்நாட்டு உற்பத்தியைப் பாதிக்காத வகையில் மட்டுமே வர்த்தக ஒப்பந்தங்கள் அமையும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது.