பாலஸ்தீனை சேர்ந்த 6 பெண்கள் மற்றும் 33 சிறுவர்களை இஸ்ரேல் விடுவித்தது
வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைக்கு வந்த போர் இடைநிறுத்த ஒப்பந்தத்தின் கீழ், 13 பணயக்கைதிகளை ஹமாஸ் விடுவித்ததை அடுத்து, 39 பாலஸ்தீனிய கைதிகளை விடுவித்ததாக இஸ்ரேலில் உள்ள சிறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அறிவித்தனர். விடுவிக்கப்பட்ட பாலஸ்தீனிய கைதிகள் அனைவரும் பெண்கள் மற்றும் 19 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள். அதே போல ஹமாஸால் விடுவிக்கப்பட்ட பணயக்கைதிகளும் பெண்கள் மற்றும் குழந்தைகள் தான். இந்த ஒப்பந்தம் நான்கு நாட்கள் நீடிக்கும். ஒப்பந்தத்தின் படி, 50 இஸ்ரேலியர்கள் மற்றும் 150 பாலஸ்தீனியர்களை விடுவிக்க வேண்டும். எனினும், 39 பாலஸ்தீனிய கைதிகள் விடுவிக்கப்பட்ட அதே நாளில், 17 பாலஸ்தீனியர்கள் கைது செய்யப்பட்டதாக பாலஸ்தீனிய கைதிகள் கிளப் வழக்கறிஞர் குழு தெரிவித்துள்ளது.
17 பணயக்கைதிகள் கொண்ட 2வது குழுவை ஹமாஸ் விடுவித்தது
கடந்த வெள்ளிக்கிழமை, ஒப்பந்தத்தில் உள்ளபடி 13 இஸ்ரேல் பணயக் கைதிகளை, செஞ்சிலுவை சங்கத்திடம் ஹமாஸ் ஒப்படைத்த நிலையில், நேற்று விடுவிக்கப்பட இருந்த கைதிகளை, நிவாரண பொருட்கள் கசாவிற்குள் அனுமதிக்கப்பட்ட பின்னரே விடுவிப்போம் என ஹமாஸ் தெரிவித்ததாக ஊடகங்கள் தெரிவித்தன. சிறிது கால தாமதத்திற்கு பிறகு, நேற்று 17 பணயக்கைதிகள் கொண்ட 2வது குழுவை ஹமாஸ் விடுவித்தது. ஹமாஸ் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பதின்மூன்று இஸ்ரேலியர்கள் மற்றும் நான்கு தாய்லாந்து பிரஜைகள் ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேலுக்கு வந்தடைத்தனர். விடுவிக்கப்பட்ட 13 இஸ்ரேலியர்களில், ஆறு பேர் பெண்கள் மற்றும் ஏழு பேர் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் என்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது.