ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட திடீர் வெள்ளம்: 26 பேர் பலி, 40 பேரைக் காணவில்லை
மத்திய ஆப்கானிஸ்தானில் பெய்த கனமழையால் ஒரே இரவில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. 40க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெள்ளிக்கிழமை முதல் நாடு முழுவதும் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் மொத்தம் 31 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும்,சொத்துக்கள் மற்றும் விவசாய நிலங்களுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது என்று பேரிடர் மேலாண்மைக்கான மாநில அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஷஃபியுல்லா ரஹிமி தெரிவித்துள்ளார். மைதான் வார்டக் மாகாணத்தின் ஜல்ரேஸ் மாவட்டத்தில் உள்ள முக்கிய பேரிடர் மண்டலத்திற்கு அவசர உதவிகள் அனுப்பப்பட்டுள்ளதாக அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார்.
நூற்றுக்கணக்கான ஹெக்டேர் விவசாய நிலங்கள் வெள்ளத்தில் அழிந்தது
காபூலுக்கு மேற்கே உள்ள இந்த ஜல்ரேஸ் மாவட்டத்தில் நேற்று இரவு ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சுமார் 40 பேர் காணாமல் போயுள்ளதாகவும் ஜபிஹுல்லா முஜாஹிட் கூறியுள்ளார். நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன என்றும், காணாமல் போனவர்கள் இடிந்து விழுந்த வீடுகளின் இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்க வேண்டும் என்றும் மாகாண ஆளுநர் அலுவலகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. மேலும், நூற்றுக்கணக்கான ஹெக்டேர் விவசாய நிலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு அழிந்துள்ளதாகவும், தலைநகர் காபூலுக்கும் மத்திய பாமியான் மாகாணத்துக்கும் இடையிலான நெடுஞ்சாலை வெள்ளம் காரணமாக மூடப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.