2 இந்திய கப்பல்கள் மீது திடீர் ட்ரோன் தாக்குதல்: சர்வதேச அளவில் பதற்றம் அதிகரிப்பு
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நடந்து வரும் போரின் காரணமாக கடல்சார் பதற்றம் அதிகரித்துள்ளதால், இந்திய பணியாளர்களுடன் இந்தியாவுக்கு வந்து கொண்டிருந்த இரண்டு கப்பல்கள் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. 25 இந்திய பணியாளர்களுடன் கச்சா எண்ணையை ஏற்றி வந்த 'MV சாய்பாபா' என்ற கப்பல் மீது தெற்கு செங்கடலில் ட்ரோன் தாக்குதல் நடத்தப்ட்டது. ஏமன் நாட்டின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் இந்த தாக்குதலை நடத்தி இருக்கின்றனர். இந்த தாக்குதலால் யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என அமெரிக்க ராணுவம் மற்றும் இந்திய கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தாக்கப்பட்ட 2 கப்பலைகளுமே இந்தியாவை தளமாக கொண்டவை
MV சாய்பாபா கப்பலைத் தவிர, MV பிளமேனன் என்ற கப்பல் மீதும் ஏமன் நாட்டின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் ட்ரோன் தாக்குதலை நடத்தி இருக்கின்றனர். MV பிளமேனன் கப்பல் நார்வே நாட்டுக் கொடியை ஏந்தி பயணித்து கொண்டிருந்த கச்சா எண்ணெய் டேங்கர் கப்பலாகும். MV பிளமேனன் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் போதும் பணியாளர்கள் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை . தாக்கப்பட்ட 2 கப்பல்களுமே இந்தியாவை தளமாக கொண்ட கப்பல்களாகும். கடந்த வெள்ளிகிழமை இரவு 8 மணிக்கு(ஏமன் நேரப்படி) ட்ரோன் தாக்குதல்கள் நடந்தது என்றும், அந்த தாக்குதல்கள் நடந்ததும் அமெரிக்க போர்க்கப்பலான லெபூன் உடனடியாக பாதிக்கப்பட்ட கப்பல்களுக்கு உதவ சென்றது என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.