LOADING...
எப்ஸ்டீன் ஆவணங்களில் இருந்து மாயமான டிரம்ப் புகைப்படம்! அமெரிக்க நீதித்துறை இணையதளத்தில் இருந்து 16 கோப்புகள் மாயம்
எப்ஸ்டீன் ஆவணங்களில் இருந்து மாயமான டிரம்ப் புகைப்படம்

எப்ஸ்டீன் ஆவணங்களில் இருந்து மாயமான டிரம்ப் புகைப்படம்! அமெரிக்க நீதித்துறை இணையதளத்தில் இருந்து 16 கோப்புகள் மாயம்

எழுதியவர் Venkatalakshmi V
Dec 21, 2025
09:59 am

செய்தி முன்னோட்டம்

மறைந்த கோடீஸ்வரர் ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ரகசிய ஆவணங்களை அமெரிக்க நீதித்துறை (DOJ) வெளியிட்டு வரும் நிலையில், அதிபர் டொனால்ட் டிரம்ப் சம்பந்தப்பட்ட சில முக்கிய கோப்புகள் திடீரென மாயமாகியுள்ளது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க நாடாளுமன்றம் கொண்டு வந்த 'எப்ஸ்டீன் கோப்புகள் வெளிப்படைத்தன்மை சட்டத்தின்' (Epstein Files Transparency Act) படி, வெள்ளிக்கிழமை அன்று பல்லாயிரக்கணக்கான ஆவணங்கள் மற்றும் புகைப்படங்கள் பொதுமக்களின் பார்வைக்காக இணையதளத்தில் பதிவேற்றப்பட்டன. ஆனால், சனிக்கிழமை காலை பார்த்தபோது, அதில் இருந்த 16-க்கும் மேற்பட்ட கோப்புகள் நீக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

டிரம்ப் புகைப்படம் 

மாயமான டிரம்ப் புகைப்படம் (File 468)

நீக்கப்பட்ட கோப்புகளில் மிக முக்கியமானது 'File 468' என்று அடையாளப்படுத்தப்பட்ட ஒரு புகைப்படமாகும். அந்த புகைப்படத்தில்: ஒரு மேஜை டிராயரில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த புகைப்படங்களில், டொனால்ட் டிரம்ப், மெலனியா டிரம்ப், ஜெப்ரி எப்ஸ்டீன் மற்றும் கிஸ்லைன் மேக்ஸ்வெல் ஆகியோர் ஒன்றாக இருக்கும் புகைப்படம் இடம் பெற்றிருந்தது. மேலும், அதே டிராயரில் டிரம்ப் போன்ற தோற்றம் கொண்ட ஒருவர் பிகினி அணிந்த பெண்களுடன் இருக்கும் மற்றொரு புகைப்படமும் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த கோப்புகள் பதிவேற்றப்பட்ட 24 மணி நேரத்திற்குள்ளேயே எவ்வித முன்னறிவிப்புமின்றி நீக்கப்பட்டுள்ளன.

கண்டனம்

எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்

நீதித்துறையின் இந்த நடவடிக்கையை ஜனநாயகக் கட்சியினர் கடுமையாக விமர்சித்துள்ளனர். "இன்னும் என்னென்ன உண்மைகளை மறைக்கப் போகிறீர்கள்? அமெரிக்க மக்களுக்கு வெளிப்படைத்தன்மை தேவை" என்று ஹவுஸ் ஓவர்சைட் கமிட்டி (House Oversight Committee) கேள்வி எழுப்பியுள்ளது. இது "அமெரிக்க வரலாற்றின் மிகப்பெரிய மூடிமறைப்பு" என செனட் தலைவர் சக் ஷுமர் விமர்சித்துள்ளார். வெளியிடப்பட்ட கோப்புகளில் பெரும்பாலானவை கறுப்பு மையால் (Redaction) மறைக்கப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்ட பெண்களும் வழக்கறிஞர்களும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். குறிப்பாக, 119 பக்கங்கள் கொண்ட ஒரு ஆவணம் முழுவதும் மறைக்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பில் கிளிண்டன் உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்களின் புகைப்படங்கள் ஆவணங்களில் இடம்பெற்றுள்ள நிலையில், டிரம்பின் புகைப்படங்கள் மட்டும் நீக்கப்பட்டது அரசியல் ரீதியாகப் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

Advertisement