ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இங்கிலாந்து நாட்டினை சேர்ந்த 12 பேர் பலி
கடந்த 7ம்.,தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் இஸ்ரேல் மீது ராக்கெட் குண்டுகளை ஏவி தாக்குதல் நடத்தினர். தொடர்ந்து அந்நாட்டின் எல்லைக்குள் புகுந்து அந்நாட்டு மக்களை சரமாரியாக தாக்கியதில் 260 பலியாகினர். 210 பேர் பிணைக்கைதிகளாக சிறைபிடிக்கப்பட்டனர் என்று கூறப்படுகிறது. இதனையடுத்து இஸ்ரேலும் பதில் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் 19வது.,நாளாக இந்த போர் தொடர்கிறது. இதனிடையே, இங்கிலாந்து நாட்டினை சேர்ந்த 12 பேர் ஹமாஸ் நடத்திய தாக்குதலில் பலியாகியுள்ளதாகவும், 5 பேரை காணவில்லை என்றும் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இவ்விவகாரம் குறித்து ரிஷி சுனக் தனது எக்ஸ் பக்கத்தில், 'ஜிகாத்துக்கான அழைப்பு யூத சமூகத்தினருக்கான அச்சுறுத்தல் மட்டுமின்றி நமது ஜனநாயக மதிப்புகளுக்கும் விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல்'என்று குறிப்பிட்டுள்ளார்.
'யூதர்களுக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தலை சகித்து கொள்ள முடியாது' - ரிஷி சுனக்
மேலும் அவர், 'யூதர்களுக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தலை நம்மால் சகித்து கொண்டு இருக்க முடியாது' என்றும், 'இதற்கான நடவடிக்கைகளை காவல்துறை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது' என்றும் பதிவு செய்துள்ளார். அண்மையில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்து இங்கிலாந்தில் போராட்டங்கள் நடத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது ரிஷி சுனக் இந்த யூதர்களுக்கான எதிர்ப்பிற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை விடுத்துள்ளார். மேலும் ரிஷி சுனக் சமீபத்தில் இஸ்ரேல் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது அவர், 'இதுபோன்ற இக்கட்டான சூழலில் இஸ்ரேலுக்கு வந்திருப்பது குறித்து வருந்துகிறேன். சர்வதேச சட்டத்தின்படி இஸ்ரேல் தங்களை தற்காத்து கொள்வதற்கான அனைத்து முயற்சிக்கும் எங்களது முழு ஆதரவு உண்டு' என்றும் கூறியது குறிப்பிடத்தக்கது.