கால்பந்து விளையாட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் நட்சத்திர வீரர் ஸ்லாடன் இப்ராஹிமோவிக்!
ஏசி மிலன் கால்பந்து அணியின் ஸ்ட்ரைக்கர் ஸ்லாடன் இப்ராஹிமோவிக் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 4) ஏசி மிலன் வெரோனாவை வென்ற பிறகு 41 வயதான அவர் ஓய்வு குறித்து இதயப்பூர்வமான உரையை வெளியிட்டார். ஏசி மிலன் அணியின் நட்சத்திர ஸ்ட்ரைக்கராக இருந்தாலும், நடப்பு சீசனில் ஸ்லாடன் இப்ராஹிமோவிக் தொடர்ந்து காயத்தால் அவதிப்பட்டு வந்த நிலையில், தற்போது கிளப்பை விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளார். இதன் மூலம் ஸ்லாடன் இப்ராஹிமோவிக்கின் 20 ஆண்டுகளுக்கும் மேலான கால்பந்து விளையாட்டு வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.
கால்பந்திலிருந்து விலகுவது குறித்த ஸ்லாடன் இப்ராஹிமோவிக்கின் உரை
போட்டி முடிந்த பிறகு உரையாற்றிய ஸ்லாடன் இப்ராஹிமோவிக், "முதல் முறை நான் மிலனுக்கு வந்தபோது, நீங்கள் எனக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தீர்கள். இரண்டாவது முறையாக நீங்கள் எனக்கு அன்பைக் கொடுத்தீர்கள். ரசிகர்களுக்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். நான் ஒட்டுமொத்தமாக மிலன் ரசிகனாக இருப்பேன். இது கால்பந்துக்கு விடைபெறும் நேரம். ஆனால் உங்களிடமிருந்து அல்ல." என்று நெகிழ்ச்சியுடன் தனது உரையில் கூறினார். கிளப் விளையாட்டில் இப்ராஹிமோவிக் 511 கோல்களுடன் முடித்துள்ளார். இப்ராஹிமோவிக் 1999 இல் மால்மோவில் கால்பந்து வாழ்க்கையை தொடங்கிய நிலையில், அதன் பின்னர் பார்சிலோனா, பிஎஸ்ஜி, மான்செஸ்டர் யுனைடெட் போன்ற தலைசிறந்த அணிகளில் விளையாடிவிட்டு கடைசியாக ஏசி மிலன் அணியில் விளையாட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.