கோலியும் டு பிளெஸ்ஸிஸும் தலா 400 ரன்கள் அடிப்பார்கள்: ஐபிஎல் லெஜெண்ட் கிறிஸ் கெயில் நம்பிக்கை
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) தனது ஐபிஎல் 2023 தொடக்க போட்டியில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக சிறப்பான வெற்றியுடன் தொடங்கியுள்ளது. 172 என்ற இலக்கு ஆர்சிபி அணிக்கு சற்று சவாலானதாகத் தோன்றினாலும், விராட் கோலி மற்றும் ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ் ஜோடியின் அபார ஆட்டம் மூலம் 17 ஓவர்களுக்குள் இலக்கை எட்டி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் கோலி மற்றும் டு பிளெசிஸ் ஆகிய இருவரும் அதிரடியாக அரைசதம் அடித்தனர். கோலி அதிகபட்சமாக 49 பந்தில் ஆட்டமிழக்காமல் 82 ரன்கள் எடுத்தார். கேப்டன் டு பிளெசிஸ் 43 பந்துகளில் 73 ரன்கள் எடுத்தார்.
விராட் கோலி மற்றும் ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ் குறித்து கிறிஸ் கெயில் கருத்து
டி20 வரலாற்றில் அதிக தனிநபர் ஸ்கோரைப் பெற்றுள்ள ஆர்சிபி லெஜண்ட் கிறிஸ் கெயில், கோலியும் டு பிளெசிஸும் ஒருவரையொருவர் ஊக்கப்படுத்துவார்கள் என்றும் அவர்களிடமிருந்து தலா 400 ரன்களைப் பெறுவது உறுதி என்றும் தெரிவித்துள்ளார். "ஃபாஃப் எப்படி செயல்படுவார் என்பது எங்களுக்குத் தெரியும். அவர் ஒரு சிறந்த கேப்டன் மற்றும் சிறந்த வீரர். அவர் சர்வதேச கிரிக்கெட்டிலும் இதைச் செய்துள்ளார், எனவே இது ஃபாஃபுக்கு புதிதல்ல" என்று ஜியோ சினிமாவில் கெயில் கூறினார். இதற்கிடையே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா, "ஆர்சிபி 16 ஓவர்களில் இலக்கை எட்டியதன் மூலம், அடுத்தடுத்த போட்டிகளில் நிகர ரன் ரேட்டை நன்றாக பராமரிக்க உதவும்.'' என்றார்.