92 ஆண்டுகால இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறை; யஷஸ்வி ஜெய்ஸ்வால் சாதனை
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், 92 ஆண்டுகால இந்திய கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளார். இந்தியா இந்த போட்டியில் 113 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததோடு, 2012க்குப் பிறகு, முதன் முறையாக உள்நாட்டில் டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இழந்துள்ளது. இந்த சோகம் ஒருபுறம் இருந்தாலும், யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் குறிப்பிடத்தக்க செயல்திறன் தனித்து நின்றது. 359 ரன்கள் என்ற இலக்கை துரத்தி நான்காவது இன்னிங்ஸில் இந்தியா பேட்டிங் செய்தபோது, யஷஸ்வி ஜெய்ஸ்வால் 65 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் அதிரடியாக 77 ரன்கள் எடுத்து இந்தியாவுக்கு வலுவான தொடக்கத்தை அளித்தார்.
சாதனையை முறியடித்த யஷஸ்வி ஜெய்ஸ்வால்
22 வயதான அவர், ஒரு காலண்டர் ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 30 சிக்சர்களை அடித்த முதல் இந்திய வீரர் ஆனார். இந்த இன்னிங்ஸில் அவர் அடித்த மூன்று சிக்சர்கள் அவரது 2024ஆம் ஆண்டின் மொத்த சிக்சர்களின் எண்ணிக்கையை 32 ஆக உயர்த்தியது. மேலும், இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு காலண்டர் ஆண்டில் அதிக சிக்சர் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் பிரண்டன் மெக்கல்லம் 2014இல் 33 சிக்சர்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார். யஷஸ்வி ஜெய்ஸ்வால் தற்போது ஒரு சிக்சர் மட்டுமே பின்தங்கியுள்ள நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது போட்டியில், பிரண்டன் மெக்கல்லத்தை முந்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.