உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் மாற்றம்; கடைசி இடத்தில் வெஸ்ட் இண்டீஸ்
டிரினிடாட்டில் உள்ள குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் vs தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி மழையால் டிராவில் முடிந்தது. இந்த போட்டியில் தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்து முதல் இன்னிங்ஸில் 357 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி முதல் இன்னிங்ஸில் 233 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், தென்னாப்பிரிக்கா இரண்டாவது இன்னிங்ஸை 173/3 என டிக்ளேர் செய்தாலும், அவர்களால் 10 விக்கெட்டுகளை எடுக்க முடியவில்லை. இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25 சுழற்சியில் தென்னாப்பிரிக்கா ஏழாவது இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் கடைசி இடத்திலும் தொடர்கிறது. பங்களாதேஷ் எட்டாவது இடத்தில் உள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் முதலிடத்தில் இந்தியா
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இங்கிலாந்தை 4-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்த இந்திய கிரிக்கெட் அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகளில் 68.51% உடன் முதலிடத்தில் உள்ளது. இந்தியா தற்போதுவரை 9 போட்டிகளில் விளையாடி 6 வெற்றி, 2 தோல்வியை பெற்றுள்ளதோடு, ஒரு போட்டியை டிராவில் முடித்துள்ளது. இந்நிலையில், இந்தியாவுக்கு அடுத்தபடியாக 62.50% புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா இரண்டாவது இடத்திலும், 50% புள்ளிகளுடன் நியூசிலாந்து மூன்றாவது இடத்திலும் உள்ளனர். அவற்றைத் தொடர்ந்து அடுத்தடுத்த இடங்களில் முறையே இலங்கை, பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் உள்ளன. முன்னதாக, இதற்கு முன்னர் நடந்த இரண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியிலும், இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியாவால் கோப்பையை வெல்ல முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.