ஐபிஎல்லுக்கு மத்தியில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு பயிற்சி : பிசிசிஐ புது திட்டம்
ஜூன் 7 முதல் 11 வரை ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குத் தயாராகும் வகையில் இந்திய அணியின் அனைத்து வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் டியூக் பந்து அனுப்பப்பட உள்ளது. அதன் மூலம் ஐபிஎல் சமயத்தில் வீரர்கள் டியூக் பந்துகளை கொண்டு பயிற்சி பெறலாம். இந்திய அணி உள்நாட்டில் டெஸ்ட் போட்டிகளுக்கு எஸ்ஜி டெஸ்ட் பந்துகளைப் பயன்படுத்துகிறது. அதே சமயம் இங்கிலாந்தில் டியூக் பந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்கிடையே, இந்திய கேப்டன் ரோஹித் சர்மா, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் வெற்றிக்கு பிறகு அளித்த ஒரு பேட்டியில், இங்கிலாந்துக்கு வீரர்களை முன்கூட்டியே அனுப்ப திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஐபிஎல்லால் இந்திய அணியின் செயல்திறன் பாதிக்குமா?
மார்ச் 31 முதல் இரண்டு மாதங்களுக்கு ஐபிஎல் போட்டிகள் நடக்க உள்ளன. ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு ஒன்பது நாட்களுக்குப் பிறகு ஜூன் 7 ஆம் தேதி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி திட்டமிடப்பட்டுள்ளது. முற்றிலும் மாறுபட்ட நிலைமையிலிருந்து டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு செல்வது சவால் நிறைந்த ஒன்றாக பார்க்கப்படும் நிலையில், இது குறித்து ரோஹித் சர்மாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ரோஹித், வீரர்களின் பணிச்சுமையை நிர்வாகம் தொடர்ந்து கவனிக்கும் என்றும், ஒன்று அல்லது இரண்டு வீரர்களைத் தவிர, மற்றவர்களுக்கு இங்கிலாந்தில் விளையாடிய அனுபவம் உள்ளதால் குறுகிய காலத்தில் நிலைமைகளுக்குப் பழகுவது ஒரு பிரச்சினையாக இருக்காது என்று தெரிவித்துள்ளார்.