டெஸ்ட் கிரிக்கெட்டில் 5,000 ரன்களை கடந்து அஜிங்க்யா ரஹானே சாதனை
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் மீட்பராக ஆடி ரன் சேர்த்து வரும் அஜிங்க்யா ரஹானே, டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். இந்த போட்டியில் அரைசதம் கடந்து விளையாடி வரும் ரஹானே, டெஸ்ட் கிரிக்கெட்டில் 5,000 ரன்களை பூர்த்தி செய்த 13 வது இந்தியர் ஆனார். முன்னதாக, ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸ் 469 ரன்கள் எடுத்த நிலையில், இந்தியா டாப் ஆர்டர் சரிவை சந்தித்தது. இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 50 ரன்கள் என இருந்த நிலையில், ஐந்தாவது இடத்தில் களமிறங்கினார். ஐந்தாவது விக்கெட்டுக்கு ரவீந்திர ஜடேஜாவுடன் (48) சேர்ந்து 71 ரன்கள் எடுத்தார். மேலும் தனது அரைசதத்தையும் பூர்த்தி செய்து பொறுப்புடன் ஆடி வருகிறார்.
வெளிநாடுகளில் இந்தியாவுக்காக அதிக ரன்களை குவித்துள்ள ரஹானே
ஏறக்குறைய 1.5 ஆண்டுகளுக்குப் பிறகு தனது முதல் டெஸ்டில் விளையாடும் ரஹானே, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் 5,000 ரன்களைக் கடக்க 69 ரன்கள் தேவைப்பட்டது. அணியின் டாப் ஆர்டர் சரிந்ததால், நெருக்கடியான நிலையில் களமிறங்கி 5,000 ரன்கள் மைல்கல்லை எட்டியுள்ளார். ரஹானே 2013 இல் அறிமுகமானதில் இருந்தே வெளிநாட்டு மைதானங்களில் இந்தியாவுக்காக சிறப்பாகவே செயல்பட்டு வந்துள்ளார். அவரது 5,000 ரன்களில் 3,350க்கும் மேற்பட்ட ரன்களை வெளிநாட்டு மைதானங்களில் மட்டுமே எடுத்துள்ளார். இதில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மட்டும் 1,150க்கும் மேல் ரன்களை எடுத்துள்ளார். அதேசமயம், ரஹானே வேறு எந்த அணிக்கு எதிராகவும் 900 ரன்கள் கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.