WTC Final 2023 : முதல் இன்னிங்சில் 296 ரன்களுக்கு சுருண்டது இந்தியா
லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்து வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 296 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. முன்னதாக, இரண்டாம் நாள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் என இந்திய கிரிக்கெட் அணி தத்தளித்த நிலையில், வெள்ளிக்கிழமை (ஜூன் 9) மூன்றாவது நாளில் அஜிங்க்யா ரஹானே மற்றும் ஷர்துல் தாக்கூர் ஜோடியின் பொறுப்பான ஆட்டத்தால் அணியின் ஸ்கோர் உயர்ந்தது. எனினும் அஜிங்க்யா ரஹானே 89 ரன்களிலும், ஷர்துல் தாக்கூர் 51 ரன்களிலும் அவுட்டானதால், இந்திய அணி 296 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தற்போது இந்தியா 173 ரன்கள் பின்தங்கியுள்ளது. ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இந்தியாவின் முதல் இன்னிங்ஸில் வீரர்கள் எட்டிய மைல்ஸ்டோன்கள்
இந்திய அணியின் அஜிங்க்யா ரஹானே இந்த போட்டியில் 69 ரன்கள் எடுத்தபோது டெஸ்ட் கிரிக்கெட்டில் 5,000 ரன்களை எட்டிய 13வது இந்தியர் என்ற பெருமையை பெற்றார். ஏழாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்து 109 ரன்கள் சேர்த்ததன் மூலம் அஜிங்க்யா ரஹானே மற்றும் ஷர்துல் தாக்கூர் ஜோடி, இங்கிலாந்தில் 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் மூலம் எடுத்த ஆறாவது இந்திய ஜோடி ஆனது. இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் அதிக முறை 50+ ஸ்கோர்கள் அடித்த வெளிநாட்டு வீரர்கள் பட்டியலில் சர் டான் பிராட்மேன் மற்றும் ஆலன் பார்டாரின் சாதனையை ஷர்துல் தாக்கூர் சமன் செய்துள்ளார். மூன்று பேரும் தலா 3 முறை 50+ ஸ்கோர்களை அடித்துள்ளனர்.