எம்எஸ் தோனி, தினேஷ் கார்த்திக்கின் சாதனையை சமன் செய்த விருத்திமான் சாஹா
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த ஐபிஎல் 2023 சீசனின் 44வது ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் விக்கெட் கீப்பர் விருத்திமான் சாஹா புதிய சாதனை படைத்துள்ளார். இந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி டெல்லி கேப்பிடல்ஸ் அணியிடம் தோல்வியைத் தழுவினாலும், டெல்லி அணியின் பிரியம் கார்க், ரிலீ ரோசோவ் மற்றும் மணீஷ் பாண்டேவை கேட்ச் மூலம் விருத்திமான் சாஹா வெளியேற்றினார். இதன் மூலம், அவர் ஐபிஎல்லில் தற்போது 102 பேரை ஆட்டமிழக்க செய்து, ஐபிஎல் வரலாற்றில் 100க்கும் மேற்பட்டோரை ஆட்டமிழக்கச் செய்த மூன்றாவது விக்கெட் கீப்பர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
ஐபிஎல்லில் நூற்றுக்கும் மேற்பட்டோரை ஆட்டமிழக்கச் செய்த விக்கெட் கீப்பர்கள்
விருத்திமான் சாஹா 153 போட்டிகளில் 79 கேட்சுகள் மற்றும் 23 ஸ்டம்பிங்குகள் என தற்போது ஐபிஎல்லில் 100க்கும் மேற்பட்டோரை ஆட்டமிழக்கச் செய்த மூன்றாவது வீரராக உள்ளார். இதற்கு முன்னதாக எம்எஸ் தோனி (178 விக்கெட்டுகள்) மற்றும் தினேஷ் கார்த்திக் (169 விக்கெட்டுகள்) மட்டுமே இந்த சாதனையை செய்துள்ளனர். இதற்கிடையே, முன்னதாக இந்த சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு சில வலுவான தொடக்கங்களை வழங்கிய விருத்திமான் சாஹா, டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக முதல் ஓவரில் 6 பந்துகளை எதிர்கொண்டு டக் அவுட் ஆகி வெளியேறினார். சாஹா தற்போதைய ஐபிஎல் சீசனில் 123.77 ஸ்ட்ரைக் ரேட்டில் 9 போட்டிகளில் 151 ரன்கள் எடுத்துள்ளார்.