மும்பையில் இன்று மகளிர் ஐபிஎல் ஏலம்; 30 இடங்களுக்கு போட்டியிடும் 165 வீராங்கனைகள்
இரண்டாவது மகளிர் ஐபிஎல் சீசனுக்கான ஏலம் சனிக்கிழமை (டிசம்பர் 9) அன்று மும்பையில் நடைபெற உள்ளது. மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், குஜராத் ஜெயன்ட்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் யுபி வாரியர்ஸ் ஆகிய ஐந்து அணிகள் தங்கள் அணியில் உள்ள இடங்களை நிரப்புவதற்காக ஏலத்தில் பங்கேற்கின்றன. 165 வீராங்கனைகள் ஏலத்தில் தங்களை பதிவு செய்து செய்துள்ள நிலையில், 104 இந்தியர்கள் மற்றும் 61 வெளிநாட்டு வீராங்கனைகள் இதில் உள்ளனர். வெளிநாட்டு வீரர்களில் 15 பேர் அசோசியேட் நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். ஐந்து அணிகளிலும் சேர்த்து மொத்தம் 30 இடங்கள் காலியாக உள்ள நிலையில், வெளிநாட்டு வீராங்கனைகளுக்கு ஒன்பது இடங்கள் காலியாக உள்ளன.
அணிகளின் பர்ஸ் விபரம்
குஜராத் ஜெயன்ட்ஸ் 2024 மகளிர் ஐபிஎல் ஏலத்தில் ரூ. 5.95 கோடியுடன் அதிக சம்பள பர்ஸுடன் ஏலத்தில் களமிறங்க உள்ளது. அந்த அணியில் 10 காலியிடங்கள் உள்ளன. நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் ஐந்து அணிகளில் மிக குறைந்தபட்சமாக ரூ.2.1 கோடியை கொண்டுள்ளது. இதில் 5 காலியிடங்கள் உள்ளன. டெல்லி கேப்பிடல்ஸ் ரூ. 2.25 கோடி பர்ஸுடன் 3 காலியிடங்களையும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ரூ.3.35 கோடியுடன் 7 காலியிடங்களையும், உபி வாரியர்ஸ் அணி ரூ.4 கோடி பர்ஸுடன் 5 காலியிடங்களையும் கொண்டுள்ளன. மும்பையில் இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு ஏலம் தொடங்க உள்ள நிலையில், ஸ்போர்ட்ஸ் 18 நெட்வொர்க் மற்றும் ஜியோ சினிமாவில் ஏலத்தை நேரலையில் காணலாம்.