பிளேஆப் சுற்றுக்குள் நுழைந்த மகளிர் ஐபிஎல் : கோப்பையை வெல்லப்போவது யார்?
மும்பையில் நடந்த 2023 மகளிர் ஐபிஎல்லின் இறுதி லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி, உ.பி.வாரியர்ஸை வீழ்த்தி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. டெல்லி கேப்பிடல்ஸ் டாஸ் வென்று முதலில் பந்துவீச முடிவு செய்தது. இதையடுத்து பேட்டிங்கை தொடங்கிய உ.பி.வாரியர்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்தது. தாலியா மெக்ராத் 58 ரன்களும், அலீசா ஹீலி 36 ரன்களும் எடுத்தனர். டெல்லி அணியின் அலைஸ் கேப்சி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அடுத்து ஆடிய டெல்லி, 17.5 ஓவரில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. அலைஸ் கேப்சி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 34 ரன்கள் எடுத்தார்.
இறுதிப்போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்ற டெல்லி கேப்பிடல்ஸ்
இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த டெல்லி கேப்பிடல்ஸ் இறுதிப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றது. மார்ச் 24ஆம் தேதி நடக்க உள்ள எலிமினேட்டர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி உ.பி.வாரியர்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடன் வரும் மார்ச் 26 ஆம் தேதி மோத உள்ளது. இந்த மூன்று அணிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மட்டுமே இந்திய வீராங்கனை கேப்டனாக உள்ளார். மகளிர் ஐபிஎல்லின் முதல் சீசன் இது என்பதால், இந்திய வீராங்கனை ஹர்மன்ப்ரீத் கேப்டனாக இருக்கும் மும்பை இந்தியன்ஸ் கோப்பையை வெல்ல வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.