மகளிர் ஐபிஎல் 2023 : முதல் ஆளாக பிளேஆப் சுற்றுக்கு முன்னேறியது மும்பை இந்தியன்ஸ்
மும்பையின் பிரபோர்ன் ஸ்டேடியத்தில் 2023 மகளிர் ஐபிஎல்லில் தொடர்ந்து ஐந்தாவது வெற்றியைப் பெற்று மும்பை இந்தியன்ஸ் பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. குஜராத் ஜெயன்ட்ஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், ஹர்மன்ப்ரீத் கவுரின் அரைசதத்தால் மும்பை இந்தியன்ஸ் 8 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது. மகளிர் ஐபிஎல்லில் ஹர்மன்ப்ரீத் கவுருக்கு இது மூன்றாவது அரைசதமாகும். குஜராத் அணியின் கார்டனர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 163 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய குஜராத் ஜெயன்ட்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்கள் மட்டுமே எடுத்தது. மும்பை இந்தியன்ஸின் நாட் ஸ்கிவர்-பிரண்ட் மற்றும் ஹேலி மேத்யூஸ் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
அனைத்து போட்டிகளிலும் வெற்றிவாகை சூடிய மும்பை இந்தியன்ஸ்
குஜராத் அணிக்கு எதிரான வெற்றியின் மூலம் இதுவரை விளையாடிய ஐந்து போட்டிகளிலும் வெற்றி பெற்று, மும்பை இந்தியன்ஸ் முதல் அணியாக பிளேஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இதற்கிடையே, நடந்து கொண்டிருக்கும் மகளிர் ஐபிஎல்லில் 200க்கும் குறைவான ரன்களை முதல் இன்னிங்சில் அடித்து வெற்றி பெற்ற முதல் அணி என்ற சாதனையை மும்பை இந்தியன்ஸ் படைத்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் தனது அடுத்த போட்டியில் உ.பி.வாரியர்ஸை மார்ச் 18 ஆம் தேதி எதிர்கொள்ள உள்ளது. இதற்கிடையே புள்ளிப்பட்டியலில் டெல்லி கேப்பிடல்ஸ் 4 வெற்றிகளுடன் இரண்டாம் இடத்திலும், உ.பி.வாரியர்ஸ் 2 வெற்றிகளுடன் மூன்றாம் இடத்திலும், குஜராத் ஜெயன்ட்ஸ் ஒரு வெற்றியுடன் நான்காம் இடத்திலும் உள்ளது. இதுவரை ஒன்றில் கூட வெல்லாத ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் கடைசி இடத்தில் உள்ளது.