Loading...
பட்டத்தை தற்காத்துக்கொள்ள வரவில்லை, மீண்டும் வெல்லவே வந்துள்ளேன்: உலக செஸ் சாம்பியன்ஷிப் குறித்து குகேஷ் பேட்டி
உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை தக்கவைக்காமல் மீண்டும் வெல்லவே வந்துள்ளதாக குகேஷ் தெரிவித்துள்ளார்.

பட்டத்தை தற்காத்துக்கொள்ள வரவில்லை, மீண்டும் வெல்லவே வந்துள்ளேன்: உலக செஸ் சாம்பியன்ஷிப் குறித்து குகேஷ் பேட்டி

எழுதியவர் Vasuki
Nov 23, 2026
02:35 pm

செய்தி முன்னோட்டம்

சுவிட்சர்லாந்தில் நாளை தொடங்கவுள்ள 2026 ஃபிடே உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற தொடக்க விழா செய்தியாளர் சந்திப்பில், நடப்பு உலக சாம்பியன் இந்தியாவின் டி. குகேஷ் மிகுந்த நம்பிக்கையுடன் தனது இலக்கை வெளிப்படுத்தியுள்ளார். 20 வயதான இரு இளம் கிராண்ட்மாஸ்டர்கள் மோதும் உலக செஸ் வரலாற்றின் மிக இளமையான சாம்பியன்ஷிப் தொடரில், உஸ்பெகிஸ்தான் வீரர் ஜாவோகிர் சிந்தரோவை எதிர்கொள்ளும் குகேஷ் பேசுகையில், "நான் இங்கு எதையும் தற்காத்துக் கொள்ள வரவில்லை; மீண்டும் புதிதாகச் சாம்பியன் பட்டத்தை வெல்லவே வந்துள்ளேன்". "சிந்தரோவ் மிகவும் நிலையான மற்றும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்; அத்தகைய வலுவான வீரருக்கு எதிராக என்னைப் பரிசோதித்து பார்க்க ஆர்வமாக உள்ளேன்" எனத் தெரிவித்துள்ளார்.

வெற்றி வாய்ப்பு 50-50

குகேஷ் கடைசி வரை போராடக்கூடியவர்: சிந்தரோவ் புகழாரம்

மறுபுறம், கேண்டிடேட்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று குகேஷுக்கு சவால் விடுத்துள்ள ஜாவோகிர் சிந்தரோவ், இந்த போட்டியின் வெற்றி வாய்ப்பு இருவருக்கும் சமமாக (50-50) உள்ளதாகக் குறிப்பிட்டார்.

தனது பயிற்சி முகாமில் குகேஷின் பழைய ஆட்டங்களை ஆய்வு செய்து நிறைய கற்றுக்கொண்டதாகக் கூறிய சிந்தரோவ், "குகேஷின் கணக்கீட்டுத் திறன் அபாரமானது; அவர் ஆட்டத்தின் கடைசி நொடி வரை விடாமல் போராடக்கூடியவர்".

"குறிப்பாக 2024 ஒலிம்பியாட் தொடரில் வெய் யிக்கு எதிராக அவர் விளையாடிய ஆட்டம் மிகவும் சிறப்பானது" எனப் புகழாரம் சூட்டினார்.

மேலும், தனது பயிற்சியாளர் ரோமன் விடோனியாக் மற்றும் முகிதீன் மதமினோவ் ஆகியோருடன், ரஷ்யாவில் பிறந்த இங்கிலாந்து கிராண்ட்மாஸ்டர் நிகிதா விட்டியுகோவும் தனது பயிற்சி குழுவில் இணைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

போட்டிக்கான தயாரிப்பு

நாளை தொடங்கும் முதல் சுற்று ஆட்டம்

போட்டிக்கான தயாரிப்பு குறித்துப் பேசிய குகேஷ், தனக்கு வீட்டில் சமைக்கப்பட்ட உணவு கிடைப்பதற்கு நன்றி தெரிவித்ததுடன், போட்டிகளுக்கு முன்பு சர்ஃபிங், வெளிப்புற விளையாட்டுகள் மற்றும் புத்தக வாசிப்பில் நேரத்தைச் செலவிட்டதாகக் கூறினார்.

அதேபோல் சிந்தரோவ் தனக்காக உஸ்பெக் சமையல் கலைஞர்கள் வந்துள்ளதாகவும், தனது தாத்தாவுடன் இணைந்து பேடல் விளையாடி வருவதாகவும் பகிர்ந்து கொண்டார்.

மொத்தம் 14 கிளாசிக்கல் சுற்றுகளைக் கொண்ட இந்தத் தொடரின் முதல் சுற்று ஆட்டம் இந்திய நேரப்படி நாளை இரவு 7:30 மணிக்குத் தொடங்கவுள்ள நிலையில், குகேஷ் கருப்பு நிறக் காய்களுடனும் சிந்தரோவ் வெள்ளை நிறக் காய்களுடனும் களமிறங்க உள்ளனர்.

ADVERTISEMENT