மகளிர் ஆசிய கோப்பை 2026: பாகிஸ்தான் அதிகாரியிடம் கோப்பையை வாங்க மறுத்த இந்திய அணி
செய்தி முன்னோட்டம்
மகளிர் ஆசிய கோப்பை 2026 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கை அணியை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. எனினும், ஆசியக் கிரிக்கெட் கவுன்சில் (ACC) தலைவரும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (PCB) தலைவருமான மோசின் நக்வியிடம் இருந்து ஆசிய கோப்பையை பெற இந்திய அணி மறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிசிசிஐ
பிசிசிஐ வைத்த 2 விருப்பங்களும்; நக்வியின் பிடிவாதமும்
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) செயலாளர் தேவஜித் சைக்கியா இது குறித்துத் தெரிவிக்கையில், பிசிசிஐ தரப்பில் இரண்டு மாற்று விருப்பங்கள் வழங்கப்பட்டதாகக் கூறினார்.
1. ஆசியக் கிரிக்கெட் கவுன்சிலின் துணைத் தலைவர் காலித் அல் ஜரூனி கையால் கோப்பையை வழங்குவது.
2. சமீபத்திய நடைமுறைப்படி, வெற்றி பெற்ற நாட்டின் கிரிக்கெட் வாரியப் பிரதிநிதி (பிசிசிஐ நிர்வாகிகள்) மூலம் கோப்பையை வழங்குவது.
ஆனால், இவ்விரண்டு கோரிக்கைகளையும் பாகிஸ்தான் வாரியத் தலைவர் மோசின் நக்வி நிராகரித்துத் தான் மட்டுமே கோப்பையை வழங்குவேன் எனப் பிடிவாதம் காட்டியதால், இந்திய அணி கோப்பையை பெறாமல் வெளியேறியது.
தலைமைப் பயிற்சியாளர்
'நாங்கள் தான் சாம்பியன்': தலைமைப் பயிற்சியாளர் அமோல் முஜும்தார் பேட்டி
இச்சம்பவம் குறித்துப் பேசிய இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் அமோல் முஜும்தார், "இது பிசிசிஐ எடுத்த அதிகாரப்பூர்வ முடிவு. அதில் நாங்கள் உறுதியாக நிற்கிறோம். மைதான திரையில் 'ஆசிய கோப்பை 2026 சாம்பியன் இந்தியா' என்று தெளிவாக வந்துவிட்டது. நாங்கள் தான் சாம்பியன்கள் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. அடுத்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்குத் தயாராவதே எங்கள் இலக்கு"* என்று தெரிவித்துள்ளார்.
கடந்த 2025 ஆண்கள் ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியிலும் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணி நக்வியிடம் கோப்பையை பெற மறுத்து இழுபறி ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.