பாக்சிங் டே டெஸ்ட் என்றால் என்ன? பெயரும் சுவாரஸ்ய பின்னணியும்
பாக்சிங் டே டெஸ்ட் என்பது டிசம்பர் 26 அன்று மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் விளையாடப்படும் ஒரு பிரபலமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியாகும். மேலும் இது டிசம்பர் 30 அல்லது அதற்கு முன் முடிவடைகிறது. 1885ஆம் ஆண்டில் விக்டோரியா மற்றும் நியூ சவுத் வேல்ஸ் இடையே தொடங்கிய ஷெஃபீல்ட் ஷீல்ட் முதல் தரப் போட்டியைக் குறிக்கும் வகையில், ஒவ்வோர் ஆண்டும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியால் விளையாடப்படுகிறது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்கள் இந்த போட்டிக்கு அதிக முக்கியத்துவம் குடுத்து, போட்டியை நேரில் காண மெல்போர்ன் மைதானத்திற்கு செல்கின்றனர். இன்றைய நிலையில், டிசம்பர் 26ஆம் தேதி தொடங்கும் டெஸ்ட் போட்டிகள் அனைத்தும் பாக்சிங் டே டெஸ்ட் போட்டியாகக் கருதப்படுகிறது.
அதிக பார்வையாளர்களை பெற்ற பாக்சிங் டே டெஸ்ட்
இதுவரையிலான பாக்சிங் டே டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 2013ஆம் ஆண்டு ஆஷஸ் தொடரில் இங்கிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியா விளையாடிய போட்டிக்கு ரசிகர்கள் அதிக அளவில் குவிந்தனர். 2013ஆம் ஆண்டின் பாக்சிங் டே டெஸ்ட் போட்டிகளில் 271,865 பேர் கலந்து கொண்டனர். இதில், ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது மற்றும் மிட்செல் ஜான்சன் ஆட்ட நாயகன் விருது பெற்றார். பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் ஆட்டநாயகனுக்கு வழங்கப்படும் முல்லாக் பதக்கமும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. முல்லாக் பதக்கம் 2020 முதல் பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் ஆட்ட நாயகனுக்கு வழங்கப்படுகிறது. இது, மூத்த மற்றும் புகழ்பெற்ற முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஜானி முல்லாக் நினைவாக வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.