விஜய் ஹசாரே கோப்பையில் அரையிறுதிக்கு முன்னேறியது தமிழ்நாடு கிரிக்கெட் அணி
விஜய் ஹசாரே கோப்பை 2023 தொடரில் தமிழ்நாடு கிரிக்கெட் அணி மும்பையை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. திங்கட்கிழமை (டிசம்பர் 11) ராஜ்கோட் சனாசரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. மும்பை இந்தியன்ஸ் அணி 48.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நிலையில் 227 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பிரசாத் பவார் 59 ரன்கள் எடுத்தார். தமிழக அணியில் வருண் சக்கரவர்த்தி மற்றும் சாய் கிஷோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில், எம் சித்தார்த் மற்றும் பாபா அபராஜித தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பாபா இந்திரஜித் சதம்
228 ரன்கள் எனும் இலக்குடன் களமிறங்கிய தமிழ்நாடு கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் பாபா அபராஜித் 45 ரன்களும், என் ஜெகதீசன் 27 ரன்களும் எடுத்து அவுட்டாகினர். தொடர்ந்து நிதிஷ் ராஜகோபால் ஒரு ரன்னில் வந்த வேகத்தில் வெளியேறினாலும், பாபா இந்திரஜித் மற்றும் விஜய் சங்கர் கடைசி வரை அவுட்டாகாமல் 43.2 ஓவர்களில் இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். பாபா இந்திரஜித் 103 ரன்களும், விஜய் சங்கர் 51 ரன்களும் எடுத்தனர். இதற்கிடையே திங்கட்கிழமை நடந்த மற்ற காலிறுதி போட்டிகளில் ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் கர்நாடக அணிகள் வெற்றி பெற்றுள்ளன. தமிழகம் புதன்கிழமை ஹரியானாவுக்கு எதிராக அரையிறுதியில் விளையாட உள்ளது.