ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட்டில் மின்னல் வேக சதம் அடித்து வைபவ் சூர்யவன்ஷி சாதனை
செய்தி முன்னோட்டம்
தோஹாவில் நடந்த ரைசிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிராக ஏ பிரிவு இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, வெறும் 32 பந்துகளில் சதம் அடித்துச் சாதனை படைத்துள்ளார். இது டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஓர் இந்தியரால் அடிக்கப்பட்ட இரண்டாவது அதிவேகச் சதமாகப் பதிவாகியுள்ளது. அதிவேகச் சதம் அடித்த இந்தியர்கள் பட்டியலில், ஊர்வில் படேல் மற்றும் அபிஷேக் ஷர்மா (இருவரும் 28 பந்துகள்) ஆகியோருக்கு அடுத்த இடத்தைப் பிடித்துள்ள வைபவ் சூர்யவன்ஷி, ரிஷப் பண்ட்டுடன் (2018 இல் டெல்லி அணிக்காக 32 பந்துகளில் சதம்) சமன் செய்துள்ளார்.
வெளிநாட்டு அணி
வெளிநாட்டு அணிக்கு எதிராக சதம்
ஊர்வில் படேல் மற்றும் அபிஷேக் ஷர்மா இருவரும் உள்நாட்டு கிரிக்கெட்டில் சையத் அலி முஷ்டாக் டிராபியில் எடுத்துள்ளனர். வெளிநாட்டு அணிகளுக்கு எதிராக ஒப்பிடும்போது, இதற்கு முன்னர் இந்திய அணியின் மூத்த வீரர் ரோஹித் ஷர்மா 2017ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில் 35 பந்துகளில் சதம் விளாசியதே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், 32 பந்துகளில் சதத்தை எட்டியதன் மூலம் வைபவ் சூர்யவன்ஷி இந்த சாதனையை முறியடித்துள்ளார். சூர்யவன்ஷியின் இந்த மின்னல் சதம், இளம் வீரரின் அபாரமான ஃபார்ம் மற்றும் டி20 போட்டிகளில் அவரது ஆதிக்கம் செலுத்தும் திறமையைப் பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.