நடுவர்கள் ஸ்டேடியத்தில் இருந்து வெளியேற்றம்; அமெரிக்கன் பிரீமியர் லீக்கில் அதிர்ச்சி சம்பவம்
அமெரிக்கன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் சனிக்கிழமை (டிச.30) அரையிறுதிக்கு முன்னதாக அரங்கேறிய சம்பவங்கள் கிரிக்கெட் உலகை அதிர வைத்துள்ளன. இந்த தொடரின்போது தங்களது நடுவர் பணிக்கு ஊதியம் தராததால் நடுவர்கள் களத்தில் இறங்க மறுத்ததாகத் தெரிகிறது. மேலும், அவர்கள் லீக்கின் உரிமையாளர் ஜெய் மிர் வருமாறும், தங்களுக்கு தரவேண்டிய $30,000 செலுத்துமாறும் கோரினர். இருப்பினும், காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, அங்கு போலீசார் வந்து நடுவர்களை வெளியேற்றினர். இதற்கிடையே, லீக் உரிமையாளரின் சகோதரர் மற்றும் பேட்டிங் தரப்பில் ஒருவர் என இரண்டு பேர் சேர்ந்து நடுவர் பணியை கவனித்துள்ளனர். இதற்கிடையே, அரையிறுதியில் பிரீமியம் இந்தியன்ஸ் அணி, பிரீமியம் பாகிஸ்தானை 6 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.