பிங்க்-பால் டெஸ்டில் அதிவேக சதம்; தனது சாதனையை தானே முறியடித்தார் டிராவிஸ் ஹெட்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர் டிராவிஸ் ஹெட் அடிலெய்டு பிங்க்-பால் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது நாளில் சதமடித்து புதிய சாதனை படைத்தார். அவர் இந்த போட்டியில் 111 பந்துகளில் சதமடித்ததன் மூலம், பிங்க்-பால் டெஸ்டில் அதிவேக சதமடித்த தனது முந்தைய சாதனையை முறியடித்தார். அவர் இதற்கு முன்னர் ஹோபார்ட்டில் 2022இல் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 112 பந்துகளில் சதமடித்திருந்தார். குறிப்பிடத்தக்க வகையில், இந்த பட்டியலில் மூன்றாவது இடத்திலும் டிராவில் ஹெட்டே உள்ளார். 2022 அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் அவர் 125 பந்துகளில் சதமடித்தார். ஹெட்டின் சதம், டெஸ்ட் கிரிக்கெட்டில் எட்டாவது மற்றும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஆகும்.
ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸ் ஹைலைட்ஸ்
பார்டர் கவாஸ்கர் டிராபியின் இரண்டாவது போட்டியான இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய கிரிக்கெட் அணி முதல் இன்னிங்ஸில் 180 ரன்களுக்கு சுருண்டது. இந்நிலையில், அடுத்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் டிராவிஸ் ஹெட்டின் (140 ரன்கள்) சிறப்பான ஆட்டம் மற்றும் மார்னஸ் லபுசாக்னேவின் (64) அரைசதம் மூலம் 337 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் ஜஸ்ப்ரீத் பும்ரா மற்றும் முகமது சிராஜ் சிறப்பாக பந்துவீசி தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து, முதல் இன்னிங்ஸில் 157 ரன்கள் பின்தங்கிய நிலையில், இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளது.