123 வருட சாதனை முறியடிப்பு; நான்காவது இன்னிங்ஸில் அதிவேக சதம் அடித்து டிராவிஸ் ஹெட் உலக சாதனை
செய்தி முன்னோட்டம்
ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியின் நான்காவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் டிராவிஸ் ஹெட் மின்னல் வேகத்தில் சதம் விளாசிச் சாதனை படைத்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிராக பெர்த்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், உஸ்மான் கவாஜா காயம் காரணமாக வெளியேறியதால், தொடக்க வீரராகக் களமிறங்கிய டிராவிஸ் ஹெட், வெறும் 69 பந்துகளில் தனது சதத்தைப் பதிவு செய்து உலக சாதனை படைத்தார். கூடுதல் விபரங்கள் இங்கே:-
ஆக்ரோஷம்
உலக சாதனைப் படைத்த ஆக்ரோஷமான ஆட்டம்
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 164 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஆஸ்திரேலியாவுக்கு 205 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கை நோக்கி ஆடிய டிராவிஸ் ஹெட், இங்கிலாந்து பந்துவீச்சாளர்களைத் துவம்சம் செய்தார். அவர் தனது ஐம்பது ரன்களை 36 பந்துகளில் எடுத்தது ஆஷஸ் வரலாற்றில் கூட்டு நான்காவது அதிவேக அரை சதமாகும். மேலும், அவர் அடித்த 69 பந்துகளில் சதம், டெஸ்ட் கிரிக்கெட்டின் நான்காவது இன்னிங்ஸில் அடிக்கப்பட்ட அதிவேக சதம் என்ற உலக சாதனையை முறியடித்தது. இதற்கு முன், 1902ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கில்பர்ட் ஜெஸ்ஸோப் அடித்த 76 பந்து சதம் சாதனையாக இருந்தது.
ஸ்ட்ரைக் ரேட்
அதிவேக ஸ்ட்ரைக் ரேட்
மேலும், டிராவிஸ் ஹெட் தனது 83 பந்துகளில் 123 ரன்களை 148.19 என்ற அபாரமான ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்தார். இதன் மூலம், வெற்றி இலக்கை நோக்கி ஆடும்போது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த வீரர்களில் அதிக ஸ்ட்ரைக் ரேட் வைத்திருந்த ஜானி பேர்ஸ்டோவின் (147.82) சாதனையை முறியடித்து, புதிய உலக சாதனையையும் படைத்தார். டிராவிஸ் ஹெட் மற்றும் மார்னஸ் லாபுஷேனின் நிதான ஆட்டத்தின் உதவியுடன் ஆஸ்திரேலியா எளிதாக இலக்கைத் துரத்தி வெற்றி பெற்றது. இதன் மூலம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி ஆஷஸ் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.