'இந்திய டெஸ்ட் தொடரில் பங்கேற்க மாட்டேன்' : இங்கிலாந்து வீரர் மொயீன் அலி உறுதி
இந்தியாவுடனான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் தான் பங்கேற்கப்போவதில்லை என இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் மொயீன் அலி தெரிவித்துள்ளார். 2021இல் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த மொயீன் அலி, ஆஷஸ் 2023 தொடருக்கான அணியில் சுழற்பந்துவீச்சாளர்கள் இல்லாத காரணத்தால், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையின் பேரில் மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்பினார். இந்நிலையில், ஆஷஸ் 2023 டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் தொடர் என்று தெரிவித்துள்ள மொயீன் அலி, இதற்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட மாட்டேன் எனத் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து அணிக்காக 68 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அலி, டெஸ்ட் கிரிக்கெட்டில் 204 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இரண்டு முக்கிய வீரர்கள் இல்லாமல் இந்திய தொடரை எதிர்கொள்ள உள்ள இங்கிலாந்து
மொயீன் அலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும், ஒயிட் பால் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவேன் எனத் தெரிவித்துள்ளார். ஐபிஎல், பாகிஸ்தான் சூப்பர் லீக் மற்றும் தி ஹண்ட்ரேட் போன்ற லீக் கிரிக்கெட்டிலும் தொடர்ந்து விளையாட உள்ளதாக ஆஷஸ் தொடரின் ஐந்தாவது போட்டிக்கு பிறகு அளித்த பேட்டியில், மொயீன் அலி தெரிவித்துள்ளார். இதற்கிடையே மொயீன் அலி இல்லாத நிலையில், இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஸ்டூவர்ட் பிராட்டும் ஆஷஸ் 2023 தொடருடன் ஓய்வை அறிவித்துள்ளார். இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு பிறகு 600க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே வீரர் ஸ்டூவர்ட் பிராட் தான் என்பது குறிப்பிடத்தக்கது.