சக இந்திய வீராங்கணை நந்தினி அகசராவுக்கு எதிராக போராடும் இந்திய தடகள வீராங்கணை ஸ்வப்னா பர்மன்
நடப்பு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், தடகள விளையாட்டுப் போட்டிகளுள் ஒன்றான ஹெப்டத்லான் விளையாட்டில் பெண்களுக்கான போட்டி நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் மூன்றாமிடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார் இந்திய வீராங்கணை நந்தினி அகசரா. கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இதே ஹெப்டத்லான் விளையாட்டில் இந்தியாவிற்காக தங்கப் பதக்கம் வென்று கொடுத்த ஸ்வப்னா பர்மன், இந்த ஆண்டு நந்தினி அகசராவை விட நான்கு புள்ளிகள் குறைவாகப் பெற்று நான்காம் இடம் பிடித்து பதக்க வாய்ப்பை இழந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது நந்தினி அகசராவை திருநங்கை எனக் குறிப்பிட்டு, அவரால் தான் தன்னுடைய வெண்கலப் பதக்க பறிபோனதாகக் எக்ஸில் பதிவிட்டு பின்னர் அந்தப் பதிவை நீக்கியிருக்கிறார் அவர்.
ஸ்வப்னா பர்மனின் குற்றச்சாட்டு:
இது குறித்து பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியிலும் தன்னுடைய கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறார் ஸ்வப்னா. அதில், "2.5 என்ற அளவுக்கு மேல் டெஸ்டோஸ்டிரோன் சுரப்பைக் கொண்ட திருநங்கைப் பெண்களால் 200மீட்டர்களுக்கு மேற்பட்ட பெண்கள் போட்டிகளில் பங்கேற்க முடியாது. எந்தப் பெண்ணாலும் இவ்வளவு வேகமாக ஹெப்டத்லானில் போட்டியிட முடியாது. தற்போதைய நிலையை அடைய நான் 13 ஆண்டுகள் உழைத்திருக்கிறேன். எனக்கான நீதி கேட்டு நான் போராடுவேன்" எனத் தெரிவித்திருக்கிறார். மேலும், இதற்கு முன்னதாகவும் நத்தினி அகசராவுக்கு எதிராக தான் போராடியதாகவும், ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான பட்டியலில் அவருடைய பெயர் இடம் பெற்றிருந்தது தனக்கு ஆச்சரியமளித்ததாகவும் அவர் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.