இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் அரசியல் தலையீட்டை தடுக்க சட்டத் திருத்தம்
அரசியல் தலையீடு காரணமாக ஐசிசியால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் வாரியம், எதிர்காலத்தில் அரசியல் தலையீட்டை தடுக்கும் வகையில், புதிய சட்டத்தை விரைவில் அமல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசியல் ரீதியாக செல்வாக்கு உள்ளவர்கள் எந்த வகையில் கிரிக்கெட் வாரிய நடவடிக்கைகளில் தலையிடுவதற்கு இந்த சட்டம் தடை விதிக்கிறது. கடந்த நவம்பரில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட அமைச்சரவை துணைக்குழு, தேவையான பரிந்துரைகளுடன் இதற்கான சட்ட முன்மொழிவை திங்கட்கிழமை (ஜனவரி 1) அன்று அவருக்கு சமர்ப்பித்துள்ளது. முன்னதாக, ஒருநாள் உலகக்கோப்பை தோல்விக்கு பிறகு, இலங்கை விளையாட்டுத் துறை அமைச்சர் ரோஷன் ரணசிங்க கிரிக்கெட் வாரியத்தை கூண்டோடு கலைத்தது குறிப்பிடத்தக்கது.
புதிய சட்டத்தின் அம்சங்கள்
இலங்கை கிரிக்கெட் வாரியம் நெருக்கடியான நிலையில் இருக்கும்போது, விளையாட்டு அமைச்சருக்கு இடைக்கால குழுக்களை நியமிக்கும் அதிகாரத்தை வழங்கிய 1973 ஆம் ஆண்டு சட்டத்தை நீக்க இந்த புதிய சட்டத்தில் விதிகள் முன்மொழியப்பட்டுள்ளன. 1996 ஒருநாள் உலகக்கோப்பையில் நாட்டின் வெற்றிக்குப் பிறகு இலங்கை கிரிக்கெட் வாரியம் அந்நாட்டில் ஒரு முக்கிய பணம் கொழிக்கும் விளையாட்டு அமைப்பாக மாறியுள்ளது. இதனால், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலரும், கிரிக்கெட் வாரியத்தில் உயர் பதவிகளை கைப்பற்றிவிட அல்லது, உயர் பதவியில் உள்ளவர்கள் மீது ஆதிக்கம் செலுத்த பலரும் முயற்சி செய்து வருவதுதான் பிரச்சினைகளுக்கு ஆணி வேறாக உள்ளது குறிப்பிடத்தக்கது.