கிரிக்கெட் ஜாம்பவானின் டான் பிராட்மேனின் இரண்டு சாதனைகளை சமன் செய்த இலங்கை வீரர் கமிந்து மெண்டிஸ்
வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 27) நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணி வீரர் கமிந்து மெண்டிஸ் சதமடித்து 182 ரன்கள் (நாட் அவுட்) குவித்தார். இதன் மூலம் கிரிக்கெட் ஜாம்பவான் டான் பிராட்மேனின் இரண்டு முக்கிய சாதனைகளை சமன் செய்தார். கமிந்து மெண்டிஸ், இந்த போட்டியில் சதமடித்ததோடு, வெறும் 13 இன்னிங்ஸ்களில் 1,000 ரன்களை நிறைவு செய்து, இந்த மைல் கல்லை மிக வேகமாக எட்டிய ஆசிய வீரர் ஆனார். முன்னர், இந்தியாவின் வினோத் காம்ப்ளி 14 இன்னிங்ஸ்களில் இந்த மைல்கல்லை எட்டி, இந்த சாதனையை தன்வசம் வைத்திருந்தார். மேலும், 13 இன்னிங்ஸ்களில் 1,000 ரன்களை எட்டிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் டான் பிராட்மேனின் சாதனையை சமன் செய்தார்.
அதிவேக டெஸ்ட் சதங்கள்
கமிந்து மெண்டிஸ் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகி தனது 13வது இன்னிங்ஸில் 5வது சதத்தை எட்டியுள்ளார். இதன் மூலம், டெஸ்டில் 22 இன்னிங்ஸ்களில் மிக வேகமாக 5 சதங்களை எட்டிய பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர் ஃபவாத் ஆலமின் ஆசிய சாதனையை முறியடித்தார். மேலும், டான் பிராட்மேன் தனது முதல் ஐந்து சதங்களை 13 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் 1930இல் எட்டியிருந்தார். அதையும் கமிந்து மெண்டிஸ் தற்போது சமன் செய்துள்ளார். ஒட்டுமொத்தமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 1948இல் 10 இன்னிங்ஸ்களில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் எவர்டன் வீக்ஸ் ஐந்து சதங்களை எட்டியதே உலக அளவில் சாதனையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.