Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்
செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 19) நடைபெறும் ஐபிஎல் 2024க்கான ஏலத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி சார்பாக கலந்துகொள்பவர்களில் சவுரவ் கங்குலி மிக உயர்ந்த கிரிக்கெட் வீரராக இருக்க மாட்டார். கார் விபத்து காரணமாக கிட்டத்தட்ட ஒரு வருடமாக கிரிக்கெட்டில் இருந்து ஒதுங்கியிருக்கும் விக்கெட் கீப்பர்-பேட்டர் ரிஷப் பந்த் தான் ஏல செயல்முறையின்போது டெல்லி அணிக்காக முன்னணியில் இருப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற டெல்லி கேப்பிடல்ஸின் ஏலத்திற்கு முந்தைய கூட்டங்களில் பந்த் முக்கிய பங்கு வகித்தார் எனக் கூறப்படுகிறது. மேலும், ஸ்போர்ட்ஸ்டார் அறிக்கையின்படி, செவ்வாய்கிழமை நடைபெறும் ஏலத்தில் பந்த் கலந்து கொள்வார் என்பதை அணியின் நிர்வாகக் குழு உறுப்பினரும் உறுதிப்படுத்தியுள்ளதாக ஸ்போர்ட்ஸ்டாருக்கு உறுதிப்படுத்தினார்.
இந்திய கால்பந்து அணியில் விளையாட வெளிநாடு வாழ் இந்திய வீரர்களை அணுக திட்டம்
அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு இந்திய கால்பந்து அணியில் விளையாடுவதற்கு வெளிநாட்டில் கால்பந்து விளையாடும் இந்திய வம்சாவளி வீரர்களை தேர்ந்தெடுப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளது. இந்த வகையில் 24 வீரர்களை அடையாளம் கண்டுள்ளதாக தெரிவித்துள்ள கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் கல்யாண் சௌபே, அவர்களை விரைவில் அணுக உள்ளதாகவும் கூறினார். தேசிய அணியில் இந்திய வம்சாவளி மற்றும் வெளிநாடு வாழ் இந்திய வீரர்களை சேர்ப்பது நீண்ட காலமாக விவாதப் பொருளாக உள்ளது. தற்போதைய தேசிய அணியின் தலைமை பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக் இதை மீண்டும் வலியுறுத்தி வருவதால் மீண்டும் பேசுபொருளாகி உள்ளது.
நவீன்-உல்-ஹக் 20 மாதம் சர்வதேச டி20 லீக் போட்டியில் விளையாட தடை
ஷார்ஜா வாரியர்ஸுடனான தனது வீரர் ஒப்பந்தத்தை மீறியதற்காக ஆப்கான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நவீன்-உல்-ஹக் சர்வதேச லீக் டி20 (ஐஎல்டி20) போட்டியில் பங்கேற்க 20 மாதம் தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, போட்டியின் தொடக்க சீசனுக்காக வாரியர்ஸ் அணிக்காக நவீன் ஒப்பந்தம் செய்திருந்தார். அவருக்கு மற்றொரு ஆண்டு நீட்டிப்பு வழங்கப்பட்டது. ஆனால் சீசன் 2க்கான தக்கவைப்பு அறிவிப்பில் கையெழுத்திட மறுத்துவிட்டார். இந்த சர்ச்சையில் தலையிட ஷார்ஜா வாரியர்ஸ் ஐஎல்டி20யை அணுகியது. ஐஎல்டி20 முதலில் ஒரு மூன்றாம் தரப்பு மத்தியஸ்தர் மூலம் மத்தியஸ்த செயல்முறையைத் தொடங்கியது. எனினும், அது தோல்வியில் முடிந்ததால் போட்டியின் விதிமுறைகளின்படி அவர் மீது தடை விதிக்கப்பட்டுள்ளது.
ரஞ்சி கோப்பைக்கான 15 பேர் கொண்ட தமிழ்நாடு கிரிக்கெட் அணி அறிவிப்பு
சாய் கிஷோர் 2023-24 ரஞ்சி கோப்பை சீசனுக்கான தமிழ்நாடு கிரிக்கெட் அணி கேப்டனாக திங்கட்கிழமை நியமிக்கப்பட்டார். மேலும், பிரதோஷ் ரஞ்சன் பால் துணைக் கேப்டனாக நியமிக்கப்பதோடு, மாநில மூத்த தேர்வுக் குழு 15 பேர் கொண்ட அணியை ரஞ்சி கோப்பைக்கு தேர்வு செய்துள்ளது. ஜனவரி 5ஆம் தேதி முதல் இந்த தொடர் தொடங்க உள்ளது. தமிழ்நாடு ரஞ்சி டிராபி 2023-24 அணி : சாய் கிஷோர், பிரதோஷ் ரஞ்சன் பால், வாஷிங்டன் சுந்தர், சாய் சுதர்சன், என் ஜெகதீசன், பாபா இந்திரஜித், விஜய் சங்கர், எஸ் லோகேஷ்வர், எஸ் அஜித் ராம், பி சச்சின், எம் முகமது, சந்தீப் வாரியர் , டி நடராஜன், விமல் குமார், திரிலோக் நாக்.
பாகிஸ்தானுக்கான எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு
மெல்போர்னில் பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான அணியை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் திங்கட்கிழமை அறிவித்துள்ளது. இதன்படி விளையாடும் லெவனில் எந்த மாற்றமும் செய்யப்படாத நிலையில், வேகப்பந்து வீச்சாளர் லான்ஸ் மோரிஸ் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, பெர்த்தில் நடந்த முதல் போட்டியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பாகிஸ்தானை 360 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியா அணி: டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், நாதன் லியான், ஜோஷ் ஹேசில்வுட், ஸ்காட் போலண்ட், கேமரூன் கிரீன்.