ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள்
சேலத்தில் கடந்த 16 ஆம் தேதி தொடங்கிய ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில், தமிழ்நாடு அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வென்றது. இதன் மூலம், குரூப் சி-யில், 7 போட்டிகளில் 4 போட்டிகளால் வெற்றி பெற்று, 28 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்றதனால், தமிழ்நாடு அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது. காலிறுதி சுற்றில் தமிழக அணி, சௌராஷ்ட்ரா அணியை சந்திக்கிறது.
ஜூனியர் டென்னிஸ் தகுதி போட்டி: இந்திய அணி இறுதி சுற்றுக்கு முன்னேற்றம்
கொழும்பில் நடைபெறும், ஐ.டி.எப். உலக ஜூனியர் டென்னிஸ் (14 வயதுக்கு உட்பட்டோர்) தகுதி சுற்று போட்டியில், அரையிறுதி சுற்றில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து, மலேசியாவில் அடுத்த மாதம் (மார்ச்) 25-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை நடக்கும் இறுதி தகுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. 21 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் இந்திய அணி, இலங்கை அணியை வீழ்த்தி தங்க பதக்கம் வென்றது.
ஆசிய உள்ளரங்க தடகளம்: இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்கம்
ஈரான் தலைநகர் டெக்ரானில் கடந்த 3 நாட்களாக நடைபெற்றுவரும் 11-வது ஆசிய உள்ளரங்க தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இறுதி நாளான நேற்று, 3 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீரர் குல்வீர் சிங் 8 நிமிடம் 07.48 வினாடிகளில் இலக்கை கடந்து தங்கப்பதக்கத்தை வென்றார். கிர்கிஸ்தானின் நுர்சுல்தான் வெள்ளிப்பதக்கமும், ஈரானின் ஜலில் நசேரி வெண்கல பதக்கத்தையும் வென்றனர். பெண்கள் பிரிவில் இந்திய வீராங்கனை அங்கிதா வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார். இந்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா 4 தங்கம், ஒரு வெள்ளியுடன் போட்டியை நிறைவு செய்துள்ளது.
ப்ரோ கபடி லீக்: தொடர்ந்து வெற்றிகளை குவித்து வரும் ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ்
ப்ரோ கபடி லீக் 2024 தொடர் ஹரியானா மாநிலம் பஞ்சகுலாவிலுள்ள தௌ தேவி லால் ஹுடா விளையாட்டு வளாகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த சீசனின் 128வது போட்டி குஜராத் ஜெயிண்ட்ஸ் - ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. ஆட்ட நேர முடிவில் 45-36 என்ற புள்ளிக்கணக்கில் ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ், குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியை வீழ்த்தியது. இந்த சீசனில் இரு அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகளிலும் ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ், குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது