Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்
புரோ கபடி லீக்கின் 10வது சீசன் குஜராத் ஜெயன்ட்ஸ் மற்றும் தெலுங்கு டைட்டன்ஸ் அணிகளுடன் டிசம்பர் 2 அன்று அகமதாபாத்தில் உள்ள டிரான்ஸ்ஸ்டேடியாவின் இகேஏ அரங்கில் தொடங்கியது. அகமதாபத்தில் மொத்தம் 5 நாட்கள் நடந்த முதல் லெக் ஆட்டங்களில், மொத்தம் 11 போட்டிகள் விளையாடப்பட்டன. இதில் அனைத்து அணிகளும் குறைந்தபட்சம் ஒரு போட்டியிலாவது விளையாடின. முதல் லெக் ஆட்டங்கள் வெள்ளிக்கிழமையுடன் (டிசம்பர் 8) நிறைவு பெற்ற நிலையில், குஜராத் ஜெயன்ட்ஸ் அதிகபட்சமாக 4 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி மற்றும் ஒரு தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அகமதாபாத் லெக்கிற்குப் பிறகு இரண்டாவது லெக் ஆட்டங்கள் டிசம்பர் 9 முதல் 13 வரை பெங்களூரில் நடைபெற உள்ளது.
இந்தியா vs தென்னாப்பிரிக்கா T20I : தென்னாப்பிரிக்கா வேகாணப்பந்து வீச்சாளர் லுங்கி என்கிடி நீக்கம்
ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 10) தொடங்கும் இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான மூன்று டி20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் தென்னாப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் லுங்கி என்கிடி பங்கேற்க மாட்டார். 27 வயதான என்கிடிக்கு இடது பக்க கணுக்கால் சுளுக்கு உள்ளது, மேலும் டிசம்பர் 26 ஆம் தேதி தொடங்கும் சுற்றுப்பயணத்தின் தொடக்க டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு முன்னர் உடல் தகுதியை பெறுவதற்கான முயற்சியில் உள்ளார். அவருக்குப் பதிலாக டி20 அணியில் பியூரன் ஹென்ட்ரிக்ஸ் இடம் பெறுவார் என தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. பியூரன் ஹென்ட்ரிக்ஸ் கடைசியாக ஜூலை 2021 இல் அயர்லாந்திற்கு எதிராக தென்னாப்பிரிக்காவிற்கான டி20 தொடரில் விளையாடியுள்ளார்.
இந்திய கால்பந்து அணியின் ஸ்பைடர்மேன் விளையாட்டில் இருந்து ஓய்வு
இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கோல்கீப்பரும் அர்ஜுனா விருது வென்றவருமான சுப்ரதா பால் கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாக வெள்ளிக்கிழமை அறிவித்தார். 37 வயதான அவர் இந்திய அணிக்காக 67 போட்டிகளில் விளையாடியுள்ளதோடு. மற்றும் இந்திய கால்பந்து சுற்றுகளில், கோல் போஸ்ட்களுக்கு இடையில் மிகவும் புகழ்பெற்ற பெயர்களில் ஒருவராக இருந்தார். மேலும் 12 ஆண்டுகளுக்கு முன்பு கத்தாரில் நடந்த ஏஎப்சி ஆசிய கோப்பையில் தனது செயல்திறனுக்காக ஸ்பைடர்மேன் என்ற புனைப்பெயரைப் பெற்றார். ஏறக்குறைய இரண்டு தசாப்தங்கள் நீடித்த ஒரு தொழில்முறை வாழ்க்கையில், சுப்ரதா இந்திய அணி மட்டுமல்லாது மோஹுன் பாகன் மற்றும் ஈஸ்ட் பெங்கால் அணிகளுக்காகவும் விளையாடியுள்ளார்.
இந்தியா vs இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் T20I : இங்கிலாந்து ஆல்ரவுண்டர் எம்மா லாம்ப் நீக்கம்
மகளிர் கிரிக்கெட்டில் இந்தியா vs இங்கிலாந்து இடையே டிசம்பர் 14-17 வரை மும்பையில் நடைபெறவிருக்கும் டெஸ்ட் போட்டியிலிருந்து இங்கிலாந்து பேட்டிங் ஆல்ரவுண்டர் எம்மா லாம்ப் வெள்ளிக்கிழமை விலகினார். 25 வயதான அவர் முதுகில் காயம் அடைந்துள்ளார். மேலும், இதனால் அவர் ஒரு முதுகெலும்பு அறுவை சிகிச்சை நிபுணருடன் கலந்தாலோசிக்க நாடு திரும்புவார் என்று இங்கிலாந்து கிரிக்கெட் தெரிவித்துள்ளது. இதனால் அவருக்கு பதிலாக மிடில் ஆர்டர் பேட்டர் மியா பௌச்சியர் மற்றும் இடது கை சுழற்பந்து வீச்சாளர் கிர்ஸ்டி கார்டன் ஆகியோர் டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
ஐபிஎல் 2024 : பஞ்சாப் கிங்ஸ் அணியின் கிரிக்கெட் மேம்பாட்டு பிரிவின் தலைவராக சஞ்சய் பங்கர் நியமனம்
ஐபிஎல் 2024 சீசனுக்கான ஏலத்திற்கு இன்னும் குறைவான நாட்களே உள்ள நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணி கிரிக்கெட் மேம்பாட்டுக்கான புதிய தலைவராக முன்னாள் இந்திய ஆல்ரவுண்டர் சஞ்சய் பங்கரை நியமித்துள்ளதாக வெள்ளிக்கிழமை அறிவித்தது. 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த பங்கர், தற்போதைய தலைமை பயிற்சியாளர் ட்ரெவர் பெய்லிஸுடன் இணைந்து பணியாற்றுவார். 51 வயதான அவர், கடந்த இரண்டு சீசன்களில் ராயல் சேலஞ்சர் பெங்களூர் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்தார். ஐபிஎல்லில் அதிக சீசன்களில் விளையாடி கோப்பையை வெல்ல முடியாத அணிகளாக பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.