Sports Round Up: ஆஃப்கானிஸ்தானை வீழ்த்திய தென்னாப்பிரிக்கா; இடைநீக்கம் செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட்; முக்கிய விளையாட்டுச் செய்திகள்
செய்தி முன்னோட்டம்
ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் நேற்று ஆஃப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் விளையாடின. டாஸை வென்று முதலில் பேட்டிங் செய்து ஆஃப்கானிஸ்தான்.
ஆஃப்கானிஸ்தான் அணியின் அஸ்மத்துல்லா ஓமர்ஸாயைத் தவிர மற்ற அனைத்து பேட்டர்களும் சிறிய பங்களிப்பை மட்டுமே செய்தனர். ஓமர்ஸாய் மட்டும் இறுதிப்பந்து வரை களத்தில் நின்று 97 ரன்களைக் குவித்து, ரபாடாவின் சிறப்பான பந்துவீச்சால் தன்னுடைய சதத்தைத் தவறவிட்டார்.
இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் 244 ரன்களைக் குவித்தது ஆஃப்கானிஸ்தான். 245 ரன்கள் இலக்கோடு சேஸிங்கைத் தொடங்கிய தென்னாப்பிரிக்க பேட்டர்கள் நிதானமான ஆட்டத்தையே கடைப்பிடித்தனர்.
இடையே விக்கெட்டுகள் வீழ்ந்த போதும், அடுத்தடுத்த வந்த பேட்டர்கள் ஆஃப்கன் பவுலர்களை சமாளித்து ஆட 47.3 ஓவர்களிலேயே ஐந்து விக்கெட்டுகள் இழப்பிற்கு இலக்கை சேஸ் செய்தது தென்னாப்பிரிக்கா.
இலங்கை
இடைநீக்கம் செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் வாரியம்:
நடப்பு ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஒன்பது போட்டிகளில் வெறும் இரண்டு வெற்றிகளை மட்டுமே பதிவு செய்து, ஏழு போட்டிகளில் தோல்வியைத் தழுவியிருக்கிறது இலங்கை அணி.
மேலும், இந்தியாவுடனான போட்டியில் 302 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைய, அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தையே கலைப்பதாக அறிவித்தார் இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர்.
சில நாட்களிலேயே மேல்முறையீடு செய்து இலங்கை கிரிக்கெட் வாரியம் செயல்பாட்டிற்கு வந்தாலும், அந்த விளையாட்டு அமைப்பின் மீது அந்நாட்டு அரசு தலையிட்டதன் காரணமாக, தங்களது உறுப்பினர்களுக்கான விதிமுறைகளை மீறியிருப்பதாகக் கூறி இலங்கை கிரிக்கெட் வாரியத்தை இடைநீக்கம் செய்திருக்கிறது ஐசிசி.
மேலும், இந்த இடைநீக்கமானது உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அறிவித்திருக்கிறது ஐசிசி.
இந்தியா
தேசிய விளையாட்டுப் போட்டிகள் 2023:
2023ம் ஆண்டிற்கான தேசிய விளையாட்டுப் போட்டிகள் நேற்றுடன் நிறைவடந்திருக்கின்றன. கோவாவில் நடைபெற்று வந்த இந்த விளையாட்டுத் தொடரில் இந்தியாவில் உள்ள பல மாநிலங்கள் பங்கேற்றிருந்தன.
இந்த விளையாட்டுத் தொடரில் 80 தங்கம், 69 வெள்ளி மற்றும் 79 வெண்கலப் பதக்கங்களுடன் ஒட்டுமொத்தமாக 228 பதக்கங்களை வென்று மகாராஷ்டிரா மாநிலம் முதல் இடத்தைப் பிடித்ததுடன், ராஜா பலிந்திர சிங் கோப்பையையும் தட்டிச் சென்றிருக்கிறது.
சர்வீசசஸ் அணியின் 66 தங்கம் உட்பட 126 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தையும், ஹரியானா மாநிலம் 62 தங்கம் உட்பட 192 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தையும் பிடித்திருக்கின்றன.
தமிழகமானது 19 தங்கம், 26 வெள்ளி மற்றும் 32 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தமாக 77 பதக்கங்களை வென்று 10வது இடம் பிடித்திருக்கிறது.
ஒருநாள் உலகக்கோப்பை
இன்று இரண்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் போட்டிகள்:
ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் நாளையுடன் நிறைவடையவிருக்கும் நிலையில், இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவிருக்கின்றன.
ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேச அணிகள் மோதும் போட்டியானது காலை 10.30 மணிக்கும், இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியானது நண்பகல் 2.00 மணிக்கும் தொடங்கவிருக்கிறது.
இவற்றில் ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றிருக்கும் நிலையில், இங்கிலாந்து மற்றும் வங்கதேச அணிகள் தொடரில் இருந்து வெளியேறியிருக்கின்றன.
ஆனால், இன்றைய போட்டியில் இங்கிலாந்துடனான வெற்றி மற்றும் ரன் ரேட்டைப் பொருத்தே பாகிஸ்தானின் அரையிறுதி வாய்ப்பு நிர்ணயிக்கப்படவிருக்கிறது.
'மாபெரும்' ரன்ரேட் வித்தியாத்தில் இங்கிலாந்தை பாகிஸ்தான் தோற்கடிக்கும் பட்சத்தில் நியூசிலாந்தை பின்தள்ளி அரையிறுதிக்கு செல்வதற்கான வாய்ப்பு பாகிஸ்தானுக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான்
இங்கிலாந்து vs பாகிஸ்தான் போட்டியில், பாகிஸ்தானுக்கான வெற்றி வாய்ப்புகள்:
பாகிஸ்தான் அணி நியூசிலாந்தை பின்தள்ளி அரையிறுதிக்கு செல்வதற்கு இன்றையை போட்டியில் அதிக ரன் ரேட்டுடன் கூடிய வெற்றி மிகவும் அவசியம்.
முதலில் பாகிஸ்தான் பேட்டிங் செய்யும் பட்சத்தில், பாகிஸ்தான் அணி 400 ரன்களுக்கு மேல் குவித்து இங்கிலாந்தை குறைந்தபட்சம் 288 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தால் மட்டுமே பாகிஸ்தான் அணி நியூசிலாந்தை விட அதிக ரன் ரேட்டைப் பெற்று அரையிறுதிக்குச் செல்ல முடியும்.
இங்கிலாந்து முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தால் பாகிஸ்தானுக்கான அரையிறுதி வாய்ப்பு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்து விடும்.
ஆம், இங்கிலாந்தை 100 ரன்களில் ஆல் அவுட் செய்தாலும், 2.5 ஓவர்களில் அந்த 100 ரன்களையும் பாகிஸ்தான் அணி குவித்தால் மட்டுமே அந்த அணி அரையிறுதிக்குச் செல்ல முடியும்.