Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்
ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 31) நடைபெற்ற வங்கதேசத்திற்கு எதிரான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்று நியூசிலாந்து கிரிக்கெட் அணி ஒயிட் வாஷ் ஆவதை தவிர்த்தது. நியூசிலாந்து டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்ததையடுத்து, முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி, 19.2 ஓவர்களில் 110 ரன்களுக்குள்ளாகவே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. நியூசிலாந்து அணியில் சிறப்பாக பந்து வீசிய மிட்செல் சான்ட்னர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 14.4 ஓவர்களில் நியூசிலாந்து அணி 95 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து ஆடிக்கொண்டிருந்தபோது தொடங்கிய மழை அதன் பிறகு நிற்காமல் வெளுத்து வாங்கியது. இதனால் போட்டி ரத்து செய்யப்பட்டு, DLS முறைப்படி 17 ரன்கள் முன்னிலையில் இருந்த நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
ISL: ஜாம்ஷெட்பூர் அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமனம்:
இந்தியன் சூப்பர் லீக் அணியான ஜாம்ஷெட்பூர் எஃப்சி, இந்த சீசனின் எஞ்சிய போட்டிகளுக்கான தலைமை பயிற்சியாளராக காலித் ஜமீலை நியமிப்பதாக ஞாயிற்றுக்கிழமை (டிச.31) அறிவித்தது. ஜாம்ஷெட்பூர் எஃப்சி தலைமை நிர்வாக அதிகாரி முகுல் சவுதாரி கூறுகையில், "ஐஎஸ்எல் மற்றும் ஐஎல்லீக்கில் முழுமையான அனுபவம் கொண்ட பயிற்சியாளரான காலித் ஜமிலை நான் வரவேற்கிறேன். கலிங்கா சூப்பர் கோப்பை மற்றும் ஐஎஸ்எல்லில் பாதி எஞ்சியிருக்கும் நிலையில், அடுத்த ஆட்டத்தில் தொடங்கி, இந்தியக் கால்பந்தில் எங்களைக் கட்டமைத்து, முன்னோக்கி அழைத்துச் செல்வதற்கான புரிதல், அனுபவம் மற்றும் சாதனைப் பதிவு அவருக்கு இருப்பதாக நாங்கள் நம்புகிறோம்." எனத் தெரிவித்துள்ளார். ஜனவரி 10ஆம் தேதி புவனேஸ்வரில் நடக்கும் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்சிக்கு எதிரான போட்டியில் காலித் பொறுப்பேற்க உள்ளார்.
2024 கேண்டிடேட்ஸ் செஸ் போட்டிக்கு தகுதி பெற்ற இந்திய வீரர்கள்:
2024 ஏப்ரல் 2 முதல் 25 வரை கனடாவின் டொராண்டோவில் திட்டமிடப்பட்ட கேண்டிடேட்ஸ் செஸ் போட்டித் தொடரில் டி.குகேஷ் மற்றும் கே.ஹம்பி ஆகியோர் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் எட்டாவது இடத்தைப் பிடித்து சனிக்கிழமை (டிசம்பர் 30) தகுதி பெற்றுள்ளனர். சென்னையில் நடந்த 2023 FIDE தகுதிச் சுற்று ஆட்டத்தில் முன்னிலை பெற்றதன் மூலம் கேண்டிட்ஸ் போட்டிக்கு தகுதி பெற்றனர். 1991 முதல் விஸ்வநாதன் ஆனந்த் மட்டுமே கேண்டிடேட்ஸ் போட்டிக்கு தகுதி பெற்ற ஒரே இந்தியராக இருந்த நிலையில் இந்த முறை ஆர்.பிரக்ஞானந்தா, விதித் குஜராத்தி, டி.குகேஷ், ஆர்.வைஷாலி மற்றும் கே. ஹம்பி என மொத்தம் ஐந்து பேர் தகுதி பெற்றுள்ளனர். இது செஸ் உலகில் இந்தியாவின் மிகப்பெரிய எழுச்சியாக பார்க்கப்படுகிறது.
விருதுகள் மற்றும் பதக்கங்களை நடைபாதையில் விட்டுச்சென்ற வினேஷ் போகத்:
ஆசிய விளையாட்டுப் போட்டி மற்றும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற வினேஷ் போகத், சனிக்கிழமையன்று (டிசம்பர் 30), அர்ஜுனா மற்றும் கேல் ரத்னா விருதுகளை புதுதில்லியில் உள்ள கர்தவ்யா பாதையில் உள்ள நடைபாதையில் விட்டுச் சென்றார். மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட பிரிஜ் பூஷனின் நெருங்கிய உதவியாளரான சஞ்சய் சிங், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக தேர்வு செய்யப்பட்டது வீரர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, வினேஷ் போகத் தனது விருதுகளை டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு வெளியே வைக்க முயன்றார். இருப்பினும், கர்தவ்யா பாதையில் அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து வினேஷ் தனது விருதுகளை கர்தவ்யா பாதையின் நடைபாதையில் விட்டுவிட முடிவு செய்தார்.
தென்னாப்பிரிக்கா டெஸ்ட் அணியின் புதிய கேப்டன்:
தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி 2024 பிப்ரவரியில் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான 14 வீரர்கள் கொண்ட அணியை சனிக்கிழமை (டிசம்பர் 30) தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதில் குறிப்பிடத்தக்க அம்சமாக, இதுவரை சர்வதேச போட்டிகளில் விளையாடாத நீல் பிராண்ட் என்ற வீரரை அணியின் கேப்டனாக நியமித்திருக்கிறது தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம். ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் தென்னாப்பிரிக்காவின் SA20 டி20 தொடர் நடைபெறவிருக்கிறது. இந்தத் தொடரில், தென்னாப்பிரிக்க அணியின் முக்கிய வீரர்கள் கலந்து கொள்ளவிருப்பதையடுத்து, முதல் தர கிரிக்கெட்டில் ஆடிய வீரர்களைக் கொண்ட இரண்டாம் தர டெஸ்ட் அணியை நியூசிலாந்துக்கு அனுப்புகிறது தென்னாப்பிரிக்கா.