8 ஆண்டுகளுக்கு நாங்க தான்! ஐசிசி ஒளிபரப்பு உரிமையை கைப்பற்றியது ஸ்கை ஸ்போர்ட்ஸ் நிறுவனம்!
ஸ்கை ஸ்போர்ட்ஸ் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுடன் (ஐசிசி) எட்டு ஆண்டுகளுக்கு வெளியில் தெரிவிக்கப்படாத தொகைக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் 2024 முதல் 2031 வரை பிரிட்டன் மற்றும் அயர்லாந்தில் அனைத்து உலகக்கோப்பைகளையும் ஒளிபரப்பும் உரிமையை ஸ்கை ஸ்போர்ட்ஸ் பெற்றுள்ளது. வெள்ளிக்கிழமை (ஜனவரி 27) இந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டது. இரண்டு நிறுவனங்களும் நேரடி ஒப்பந்தத்தில் ஈடுபடுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. பிரிட்டன் சந்தையில் ஊடக உரிமைகளுக்கான ஏல முறை எதுவும் இல்லாததால் ஸ்கை ஸ்போர்ட்ஸ் உடன் நேரடியாக ஐசிசி இந்த ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. ஸ்கை ஸ்போர்ட்ஸ் ஏற்கனவே இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்துடன் நீண்ட கால ஒளிபரப்பு ஒப்பந்தம் செய்து பிரிட்டனுக்குள் கிரிக்கெட் நிகழ்வுகளை காண்பித்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஐசிசி-ஸ்கை ஸ்போர்ட்ஸ் ஒப்பந்தத்தின் கீழ் வரும் நிகழ்வுகள்
2024 முதல் 2031 வரையிலான காலகட்டத்தில் ஒருநாள் மற்றும் டி20 உலகக் கோப்பைகள் உட்பட மொத்தம் 28 சர்வதேச நிகழ்வுகளை ஸ்கை ஸ்போர்ட்ஸ் ஒளிபரப்பும். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி மற்றும் 19 வயதுக்குட்பட்டோருக்கான போட்டிகளை ஒளிபரப்புவது இந்த ஒப்பந்தத்தில் அடங்கும். 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, 2026 மகளிர் டி20 உலகக்கோப்பை மற்றும் 2030 ஆடவர் டி20 உலகக்கோப்பை ஆகியவை இந்த காலகட்டத்தில் இங்கிலாந்திலேயே நடைபெறும் மூன்று உறுதிப்படுத்தப்பட்ட ஐசிசி நிகழ்வுகள் ஆகும். இதேபோல் இந்திய சந்தையில், டிஸ்னி ஸ்டார் 2024 மற்றும் 2027 க்கு இடைப்பட்ட அனைத்து ஐசிசி நிகழ்வுகளுக்கான ஒளிபரப்பும் உரிமையை கடந்த 2022இல் பெற்றது குறிப்பிடத்தக்கது.