வங்கதேச டி20 கிரிக்கெட் தொடரில் ஷுப்மன் கில்லுக்கு ஓய்வு; பிசிசிஐ திட்டம்
இந்திய கிரிக்கெட் அணியின் டி20 துணைக் கேப்டனான ஷுப்மன் கில், வங்கதேசத்துக்கு எதிரான மூன்று டி20 கிரிக்கெட் போட்டிகள் தொடரில் பங்கேற்க மாட்டார் என பிசிசிஐ அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார். வங்கதேசத்திற்கு எதிராக செப்டம்பர் 19 முதல் நடக்கும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்குப் பிறகு அக்டோபர் 7ஆம் தேதி இந்த டி20 கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. இந்த முடிவு பிசிசிஐயின் பணிச்சுமை மேலாண்மை கொள்கைக்கு ஏற்ப உள்ளது. டி20 கிரிக்கெட்டை விட டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஒருநாள் சர்வதேச போட்டிகளுக்கு முன்னுரிமை அளிப்பதை பிசிசிஐ நோக்கமாகக் கொண்டுள்ளது. டெஸ்ட் போட்டிகளுக்கான இந்தியாவின் டாப் ஆர்டரில் ஷுப்மன் கில் ஒரு முக்கிய வீரராக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் வரவிருக்கும் டெஸ்ட் சீசன்
இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்துடன் இரண்டு போட்டிகள், நியூசிலாந்து அணியுடன் மூன்று போட்டிகள் மற்றும் ஆஸ்திரேலியாவுடன் ஐந்து டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் என மிகப்பெரிய பட்டியலை வரிசையாகக் கொண்டுள்ளது. இதில் ஷுப்மன் கில் ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலியுடன் டாப் ஆர்டரின் முக்கிய பேட்டர்களில் ஒருவராக செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, வங்கதேசத்திற்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் சூர்யகுமார் யாதவ் தலைமையில் இளம் இந்திய அணி களமிறக்கப்படும் எனத் தெரிகிறது. முன்னதாக, சமீபத்தில் இலங்கை சென்ற இந்திய அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.