மைதானத்தில் கலக்கல் நடனம்! வைரலாகும் ஷுப்மன் கில்லின் காணொளி
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாளான புதன்கிழமையன்று (ஜூலை 13) இந்திய அணி வலுவாக ஆதிக்கம் செலுத்தியது. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அஸ்வின் ரவிச்சந்திரன் (5 விக்கெட்டுகள்) மற்றும் ரவீந்திர ஜடேஜாவின் (3 விக்கெட்டுகள்) சுழலில் சிக்கி 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகினர். இதையடுத்து பேட்டிங்கை தொடங்கிய இந்திய கிரிக்கெட் அணி, முதல் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காராக களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது முதல் டெஸ்ட் இன்னிங்ஸில் 73 பந்துகளில் 40 ரன்களுடனும், கேப்டன் ரோஹித் ஷர்மா 65 பந்துகளில் 30 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
ஷுப்மன் கில்லின் உற்சாக நடனம்
முன்னதாக, வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முதல் இன்னிங்ஸ் பேட்டிங் முடிவடையும் தருவாயில் ஷுப்மன் கில் ஜாலி மனநிலையில் காணப்பட்டார். மேலும், வெஸ்ட் இண்டீஸ் அணியின் கடைசி விக்கெட் மீதமிருந்த நிலையில், ஷார்ட் லெக் நிலையில், சக அணி வீரர் விராட் கோலி மற்றும் கீப்பர் இஷான் கிஷான் அருகில் நின்று பீல்டிங் செய்தபோது உணர்ச்சி மிகுதியில் நடனமாடினார். இந்த காணொளி ட்விட்டரில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதற்கிடையே, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக இதுவரை களமிறங்கிய ஷுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் வருகையால் இந்த போட்டியில் நம்பர் 3 பேட்டராக களமிறங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.