சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பாகிஸ்தான் வீரர் : ஷதாப் கான் சாதனை
பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ஷதாப் கான், சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் 100 விக்கெட்டுகளை கடந்த முதல் பாகிஸ்தான் பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார். ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் அவர் இந்த சாதனையை செய்தார். முன்னதாக ஷதாப், ஜாம்பவான் ஷாகித் அப்ரிடியை பின்னுக்குத் தள்ளி அதிக டி20 விக்கெட்டுகளை கைப்பற்றிய பாகிஸ்தான் வீரர் என்ற சாதனையையும் படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே பாகிஸ்தான் தொடரை இழந்தாலும், மூன்றாவது டி20 போட்டியில் ஆப்கானை வீழ்த்தி ஆறுதல் வெற்றியை பதிவு செய்தது.
100 விக்கெட்டுகளை வீழ்த்திய ஏழாவது வீரர்
ஷதாப் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய ஏழாவது வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். இதற்கு முன்னதாக, டிம் சவுத்தி, ஷாகிப் அல் ஹசன், ரஷித் கான், இஷ் சோதி, லசித் மலிங்கா மற்றும் முஸ்தாபிசுர் ரஹ்மான் ஆகியோர் சர்வதேச டி20 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். ஷதாப் தனது 87வது போட்டியில் 100 டி20 விக்கெட்டுகளை எடுத்தார். முன்னதாக, 2022 டி20 உலகக் கோப்பையின் போது, 97 டி20 விக்கெட்டுகள் என்ற அப்ரிடியின் நீண்ட கால சாதனையை ஷதாப் கான் முறியடித்திருந்தார். தற்போது நடந்து முடிந்த ஆப்கானிஸ்தான் தொடரில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமுக்கு ஓய்வளிக்கப்பட்ட நிலையில், அணியையும் ஷதாப் கான் வழிநடத்தியது குறிப்பிடத்தக்கது.