மூட்டு வலிக்கு எதிராக போராடும் சாய்னா நேவால்; விரைவில் ஓய்வை அறிவிக்கத் திட்டம்
இந்திய நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், தான் மூட்டுவலியுடன் போராடி வருவதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் தனது எதிர்காலம் குறித்து முடிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். 2012 லண்டன் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக வெண்கலம் வென்ற சாய்னா நேவால், கடைசியாக சிங்கப்பூர் ஓபனில் ஒரு வருடத்திற்கு முன்பு முதல் சுற்றிலேயே வெளியேறினார். அவர் தனது தொழில்முறை விளையாட்டு வாழ்க்கையின் இறுதி கட்டத்தில் இருப்பதாக நேவால் கூறினார். இந்தியாவின் துப்பாக்கிச் சுடுதல் வீரர் ககன் நரங்கிடம் ஹவுஸ் ஆஃப் க்ளோரி போட்காஸ்டில் பேசியபோது, "முழங்கால் நன்றாக இல்லை. எனக்கு மூட்டுவலி உள்ளது. என் குருத்தெலும்பு மோசமாகிவிட்டது. எட்டு-ஒன்பது மணி நேரம் விளையாடுவது மிகவும் கடினம்." என்று சாய்னா நேவால் கூறினார்.
சாய்னா நேவால் பேட்டி
சாய்னா நேவால் தற்போது ஓய்வு பெறுவது பற்றி யோசித்து வருவதாகவும் தெரிவித்தார். இதுகுறித்து அவர் பேசுகையில், "நானும் இதைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறேன். இது ஒரு சாதாரண நபர் செய்யும் வேலையைப் போலவே இது வருத்தமாக இருக்கும். வெளிப்படையாக, ஒரு விளையாட்டு வீரரின் வாழ்க்கை எப்போதும் குறுகியதாக இருக்கும். நான் 9 வயதில் தொடங்கினேன். எனக்கு அடுத்த ஆண்டு 35 வயதாகி இருக்கும்." என்றார். அவர் மேலும், இந்த ஆண்டு இறுதிக்குள் எனது விளையாட்டு குறித்து இறுதி முடிவை எடுக்க திட்டமிட்டுள்ளேன் எனக் கூறியுள்ளார். ஒலிம்பிக்கில் பங்கேற்பது தனது சிறுவயது கனவு என்றும், மூன்று ஒலிம்பிக்கில் பங்கேற்று அங்கு தனது முழு திறனையும் கொடுத்து விளையாடியதில் மகிழ்ச்சியே எனக் கூறி முடித்தார்.