இந்திய குடியுரிமை பெற்றார் பிரபல ஆஸ்திரேலிய கால்பந்து வீரர் ரியான் வில்லியம்ஸ்
செய்தி முன்னோட்டம்
முன்னாள் ஆஸ்திரேலிய கால்பந்து வீரர் ரியான் வில்லியம்ஸ் அதிகாரப்பூர்வமாக இந்தியக் குடிமகனாக மாறியதன் மூலம், இந்தியக் கால்பந்து வரலாற்றில் ஒரு முக்கியத் திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. பெங்களூரு எஃப்சி கால்பந்து கிளப்பின் பயிற்சி மையத்தில் நடைபெற்ற குடியுரிமை ஒப்படைப்பு விழாவில், இந்தியக் கால்பந்து ஜாம்பவான் சுனில் சேத்ரி, ரியான் ல்லியம்ஸிடம் அவரது புதிய இந்தியப் பாஸ்போர்ட்டை வழங்கினார். இந்த நிகழ்வு ரசிகர்கள் மத்தியில் வைரலானது. இந்த 30 வயதான விங்கர், தனது தாயின் ஆங்கிலோ-இந்திய வம்சாவளி மூலம் இந்தியக் குடியுரிமை பெறத் தகுதி பெற்றார். அவரது குடும்பத்தினர், பெங்களூரு எஃப்சி நிர்வாகம் மற்றும் கர்நாடக மாநிலக் கால்பந்து சங்கம் ஆகியவற்றின் உறுதியான ஆதரவுடன், மத்திய அமைச்சர்கள் மட்டத்தில் இறுதி ஒப்புதல்கள் பெறப்பட்டன.
முயற்சி
இந்திய கால்பந்து கூட்டமைப்பின் முயற்சி
இந்தியக் கால்பந்து கூட்டமைப்பு (AIFF), திறமை வாய்ந்த வெளிநாடுகளைச் சேர்ந்த இந்திய வம்சாவளிகளை தேசிய அணியில் ஒருங்கிணைக்கும் முயற்சியின் முதல் வெற்றியாக இது பார்க்கப்படுகிறது. முன்னதாக ஆஸ்திரேலியாவுக்காக இளைஞர் மட்டத்திலும், 2019 இல் ஒரு சீனியர் போட்டியிலும் விளையாடிய ரியான் வில்லியம்ஸ், பிஃபா விதிமுறைகளின்படி இப்போது இந்தியாவுக்காக விளையாடத் தகுதியுடையவர் ஆவார். ஏஎஃப்சி ஆசியக் கோப்பையின் தகுதிச் சுற்றுகளுக்கு முன்னதாக, தலைமைப் பயிற்சியாளர் காலித் ஜாமீலின் தாக்குதல் ஆட்ட உத்திகளுக்கு இவரது வருகை ஒரு பெரிய ஊக்கத்தைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிளப் போட்டிகள்
கிளப் போட்டிகளில் அனுபவம்
ஐரோப்பாவில் ஃபல்ஹாம், போர்ட்ஸ்மவுத் போன்ற கிளப்களில் ஒரு தசாப்த காலமாக விளையாடி அனுபவம் வாய்ந்த ரியான் வில்லியம்ஸ், 2023 இல் பெங்களூரு எஃப்சியில் இணைந்தார். அங்கு 46 போட்டிகளில் 13 கோல்கள் மற்றும் 5 அசிஸ்ட்களைப் பதிவு செய்து, சேத்ரியுடன் வலுவான கூட்டணியை உருவாக்கியுள்ளார். இதற்கிடையில், உலகெங்கிலும் உள்ள இந்தியத் திறமைகளைப் பயன்படுத்த AIFF ஆர்வமாக உள்ளதன் ஒரு பகுதியாக, நேபாளத்தில் பிறந்த அபினீத் பாரதி இந்திய தேசிய அணியின் முகாமில் தற்போது தேர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.