Page Loader
நெதர்லாந்துக்கு எதிராக 9 பந்துவீச்சாளர்களை பயன்படுத்தியது இதற்குதான் : ரோஹித் ஷர்மா
நெதர்லாந்துக்கு எதிராக 9 பந்துவீச்சாளர்களை பயன்படுத்தியது ஏன் என ரோஹித் ஷர்மா விளக்கம்

நெதர்லாந்துக்கு எதிராக 9 பந்துவீச்சாளர்களை பயன்படுத்தியது இதற்குதான் : ரோஹித் ஷர்மா

எழுதியவர் Sekar Chinnappan
Nov 13, 2023
08:15 pm

செய்தி முன்னோட்டம்

2023 ஒருநாள் உலகக்கோப்பையின் இறுதி லீக் ஆட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 12) நெதர்லாந்துக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி 160 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் நடப்பு உலகக்கோப்பையில் அனைத்து லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்துடன் முடித்துள்ளது. நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் என்பது ஏற்கனவே கணிக்கப்பட்டதுதான் என்பதால் அது பெரிய அளவில் கவனம் ஈர்க்கவில்லை. ஆனால், யாரும் எதிர்பாராத வகையில், இந்த போட்டியில் இந்திய அணியில் 9 வீரர்களை பந்துவீச்சுக்கு ரோஹித் ஷர்மா பயன்படுத்தியது அனைருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும், இந்த போட்டியில் நட்சத்திர பேட்டர்கள் விராட் கோலி, ரோஹித் ஷர்மா உள்ளிட்ட பல பேட்டர்களும் பந்துவீசினர்.

Rohit Sharma explains why he used 9 bowlers against Netherlands

சோதித்து பார்க்க விரும்பி களமிறக்கிய ரோஹித் ஷர்மா

பெங்களூரில் உள்ள எம் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த இந்த போட்டியில் பந்துவீச வாய்ப்பு பெற்ற விராட் கோலி, கடந்த ஒன்பது ஆண்டுகளில் தனது முதல் ஒருநாள் விக்கெட்டை பெற்றார். மேலும், ரோஹித் ஷர்மாவும் பந்துவீசி ஒரு விக்கெட்டை கைப்பற்றியதன் மூலம், 11 ஆண்டுகளில் முதல் விக்கெட்டை பெற்றார். அதேபோல், சூர்யகுமார் யாதவ் மற்றும் ஷுப்மன் கில்லுக்கும் பந்துவீச வாய்ப்பு கிடைத்த நிலையில், அவர்கள் விக்கெட் எதுவும் எடுக்கவில்லை. இந்நிலையில், 9 வீரர்கள் பந்துவீசியது குறித்து மனம் திறந்த ரோஹித் ஷர்மா, அணியில் ஐந்து வலுவான பந்துவீச்சாளர்கள் இருக்கும்போது, இதுபோன்ற மாற்று பந்துவீச்சு முறையை சோதிக்க விரும்பியதாக தெரிவித்தார். மேலும், இந்த போட்டியில் சோதிப்பதற்கான வாய்ப்பு கிடைத்ததால் அதை செய்ததாக மேலும் கூறினார்.