சுனில் கவாஸ்கர், வீரேந்திர சேவாக்கின் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா
டொமினிகாவில் உள்ள வின்ட்சர் பார்க்கில் நடந்து வரும் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய கிரிக்கெட் அணி இரண்டாம் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 312 ரன்கள் எடுத்துள்ளது. இரண்டாம் நாளில் அறிமுகப் போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதமடித்ததால், அனைவரது பார்வையும் அவர் மீது உள்ள நிலையில், ரோஹித் ஷர்மா தனது 50 ரன்களை எட்டியபோது ஒரு மிகப்பெரிய சாதனையை படைத்தார். சர்வதேச கிரிக்கெட்டில் ரோஹித் ஷர்மா தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி 102வது முறையாக 50+ ஸ்கோர்களை எட்டியுள்ளார்.
அதிக முறை 50+ ஸ்கோர் அடித்தவர்களில் முதலிடத்தில் சச்சின் டெண்டுல்கர்
ரோஹித் ஷர்மா 102வது முறையாக இந்த இலக்கை எட்டியதன் மூலம், இந்திய கிரிக்கெட் வீரர்களில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி அதிக முறை 50+ ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில், சுனில் கவாஸ்கர் மற்றும் வீரேந்திர சேவாக் ஆகியோரை ரோஹித் ஷர்மா பின்னுக்குத் தள்ளியுள்ளார். கவாஸ்கர் மற்றும் சேவாக் இருவரும் தலா 101 முறை 50+ ஸ்கோர் எடுத்தனர். இந்த பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் 120 முறை 50+ ஸ்கோர்களை எட்டி இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். ஷிகர் தவான் 79 முறை எடுத்து நான்காவது இடத்தில் உள்ளார். முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் ஸ்ங்குலி 77 முறை எடுத்துள்ளார்.