LOADING...
20 ஆண்டு கால பயணத்திற்கு முடிவு; இந்திய டென்னிஸ் ஜாம்பவான் ரோஹன் போபண்ணா ஓய்வு
டென்னிஸ் ஜாம்பவான் ரோஹன் போபண்ணா ஓய்வு

20 ஆண்டு கால பயணத்திற்கு முடிவு; இந்திய டென்னிஸ் ஜாம்பவான் ரோஹன் போபண்ணா ஓய்வு

எழுதியவர் Sekar Chinnappan
Nov 01, 2025
04:49 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய டென்னிஸ் உலகின் தூணாக விளங்கிய மூத்த வீரர் ரோஹன் போபண்ணா, தனது 20 ஆண்டுகளுக்கும் மேலான அற்புதமான தொழில்முறை டென்னிஸ் வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெறுவதாகச் சனிக்கிழமை (நவம்பர் 1) அன்று அறிவித்துள்ளார். 45 வயதான போபண்ணாவின் இறுதிப் போட்டியாக, அவர் அலெக்ஸாண்டர் புப்ளிக் உடன் இணைந்து ஆடிய பாரிஸ் மாஸ்டர்ஸ் 1000 போட்டியின் ரவுண்ட் ஆஃப் 32 ஆட்டம் அமைந்தது. இந்தப் போட்டியில் அவர்கள் ஜான் பீர்ஸ் மற்றும் ஜேம்ஸ் டிரேசி இணையிடம் 5-7, 6-2, 10-8 என்ற செட் கணக்கில் போராடித் தோல்வியடைந்தனர். தனது பலம் வாய்ந்த சர்வீஸ் மற்றும் கூர்மையான நெட் ஆட்டத்தால் அறியப்பட்ட போபண்ணா, இந்தியாவின் சிறந்த இரட்டையர் வீரர்களில் ஒருவராகத் திகழ்ந்தார்.

பட்டம்

வென்ற பட்டங்கள்

அவர் 2017 ஆம் ஆண்டில் கேப்ரியேலா டாப்ரோவ்ஸ்கியுடன் இணைந்து பிரெஞ்ச் ஓபன் கலப்பு இரட்டையர் பட்டத்தை வென்றார். மேலும், டேவிஸ் கோப்பை மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவைப் பெருமையுடன் பிரதிநிதித்துவப்படுத்தினார். குறிப்பாக, 2024 ஆம் ஆண்டில் 43 வயதில் ஆஸ்திரேலிய ஓபன் ஆண்கள் இரட்டையர் பட்டத்தை வென்றதுடன், உலக தரவரிசையில் முதலிடத்தை எட்டி, தனது மீள்தன்மையைப் பறைசாற்றினார். கர்நாடகாவின் கூர்க் பகுதியிலிருந்து வந்த போபண்ணா, தனது ஓய்வு குறித்தப் பதிவில், "என் பயணத்தைத் தொடங்கிய இந்த விளையாட்டுக்கு எப்படி விடை கூறுவது? 20 மறக்க முடியாத ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வு பெற வேண்டிய நேரம் வந்துவிட்டது." என உருக்கமாக தெரிவித்தார்.

இளம் வீரர்கள்

இளம் வீரர்களுக்கு பயிற்சியளிக்க திட்டம்

ரோஹன் போபண்ணா தனது அறிக்கையில் மேலும், "என் கைகளில் கனமும் நன்றியுணர்வும் நிறைந்துள்ளன. இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தியது என் வாழ்வில் கிடைத்த மிகப் பெரிய கௌரவம். என் இலக்குகளை வரையறுப்பது எனது தொடக்கம் அல்ல என்பதை இளம் வீரர்களுக்குக் கற்பிக்க விரும்புகிறேன்." என்று உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.