டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல்கல் சாதனை; கபில்தேவின் ரெக்கார்டை முறியடித்தா ரிஷப் பண்ட்
இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் ரிஷப் பண்ட், பெங்களுருவில் நடந்து வரும் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 99 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதற்கிடையே, இந்த போட்டியின் போது, டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் அடித்த இந்திய கிரிக்கெட் வீரர்களின் பட்டியலில் புகழ்பெற்ற ஆல்ரவுண்டர் கபில் தேவை விஞ்சி ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை ரிஷப் பண்ட் எட்டினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் கபில்தேவின் 61 சிக்ஸர்களை முறியடிக்க இந்த போட்டிக்கு முன்னதாக, ரிஷப் பந்திற்கு மூன்று சிக்சர்கள் தேவைப்பட்டன. நியூசிலாந்தின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் அஜாஸ் பட்டேலை ஒரு ஓவரில் தொடர்ச்சியாக சிக்சர்கள் அடித்ததன் மூலம் கபில்தேவின் சாதனையை முறியடித்தார்.
அதிக சிக்சர்கள் அடித்த வீரர்களின் பட்டியல்
இந்த செயல்திறனுடன், 62 இன்னிங்ஸில் மொத்தம் 63 சிக்ஸர்களுடன், டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவின் ஆறாவது அதிக சிக்ஸர் அடித்தவராக ரிஷப் பண்ட் உள்ளார். இதற்கிடையே, டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய கிரிக்கெட் வீரர்களில் அதிக சிக்சர்கள் அடித்தவராக வீரேந்திர சேவாக் 90 சிக்சர்களுடன் முதலிடத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து ரோஹித் ஷர்மா (88), எம்எஸ் தோனி (78), சச்சின் டெண்டுல்கர் (69), ரவீந்திர ஜடேஜா (66) உள்ளனர். இதற்கிடையே, நியூசிலாந்துக்கு எதிரான இந்த போட்டியை பொறுத்தவரை, இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 462 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆன நிலையில், 107 ரன்கள் வெற்றி இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியுள்ளது.