ஐசிசி சிறந்த ஆடவர் டெஸ்ட் அணி 2022 : இந்தியர் வீரர்களில் ரிஷப் பந்த் மட்டும் இடம் பெற்றார்!
ஐசிசி நேற்று (ஜனவரி 24) 2022 ஆம் ஆண்டின் சிறந்த ஆடவர் டெஸ்ட் அணியை அறிவித்துள்ளது. ஆடவர் அணியில் இந்திய விக்கெட் கீப்பர் பேட்டர் ரிஷப் பந்த் மட்டுமே இடம் பெற்றுள்ளார். விராட் கோலி 2022 ஆம் ஆண்டில் டி20 போட்டிகளில் சிறப்பாக விளையாடினாலும், டெஸ்டில் அவர் சோபிக்கவில்லை. அதேபோல் பும்ரா, ஜடேஜா போன்ற வீரர்கள் காயம் காரணமாக பல போட்டிகளில் விளையாடவில்லை என்பதால் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. ஐசிசி ஆடவர் டெஸ்ட் லெவன் 2022 : உஸ்மான் கவாஜா, கிரைக் பரத்வொயிட், மார்னஸ் லபுசாஞ்ச்னே, பாபர் அசாம், ஜானி பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), பேட் கம்மின்ஸ், ககிஸோ ரபாடா, நாதன் லியான், ஜேம்ஸ் ஆண்டர்சன்.
எம்.எஸ்.தோனியின் சாதனையை சமன் செய்த ரிஷப் பந்த்
2022 ஆம் ஆண்டில், டெஸ்ட் போட்டிகளில் இந்திய வீரர்களில் அதிக ரன் குவித்தவர் என்ற சாதனையை, 25 வயதேயான ரிஷப் பந்த் கொண்டுள்ளார். இது தவிர, ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணியில் மூன்றாவது முறையாக இடம் பெற்று தோனியின் சாதனையையும் சமன் செய்துள்ளார். 2022 ஆம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணியில் இடம் பிடித்துள்ள நிலையில், இதற்கு முன்னதாக 2021 மற்றும் 2018லும் இடம் பிடித்துள்ளார். தோனியை பொறுத்தவரை 2009, 2010 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் இடம் பிடித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பர்களை பொறுத்தவரை இலங்கையின் குமார் சங்ககாரா மிக அதிகபட்சமாக 5 முறை இடம் பிடித்துள்ள நிலையில், அதற்கு அடுத்தபடியாக தோனி மற்றும் பந்த் உள்ளனர்.