LOADING...
ஐபிஎல் 2026 மகுடம் யாருக்கு? அகமதாபாத்தில் ஆர்சிபி - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் நாளை மோதல்
ஐபிஎல் 2026 இறுதிப்போட்டி

ஐபிஎல் 2026 மகுடம் யாருக்கு? அகமதாபாத்தில் ஆர்சிபி - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் நாளை மோதல்

எழுதியவர் Sekar Chinnappan
May 30, 2026
07:41 pm

செய்தி முன்னோட்டம்

ஐபிஎல் 2026 தொடரின் இறுதிப்போட்டியில், நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, முன்னாள் சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியை நாளை அகமதாபாத்தில் எதிர்கொள்கிறது. முதலாவது தகுதிச் சுற்றில் குஜராத் அணியை 92 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, பிளே-ஆஃப் வரலாற்றிலேயே அதிகபட்சமாக 254 ரன்கள் குவித்து ஆர்சிபி நேரடியாக இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது. நாளை நடக்கும் போட்டியில் ஆர்சிபி வெல்லும் பட்சத்தில், சென்னை மற்றும் மும்பை அணிகளுக்குப் பிறகு ஐபிஎல் வரலாற்றில் கோப்பையைத் தக்கவைத்த 3வது அணி என்ற சாதனையை ரஜத் படிதார் தலைமைப் படை பெறும்.

குஜராத் கம்பேக் மற்றும் வீரர்கள் விபரம்

குஜராத் அணியின் மாஸ் கம்பேக் மற்றும் ஆரஞ்சு, ஊதா தொப்பிகளுக்கான வீரர்களின் பலப்பரீட்சை

முதலாவது தகுதிச் சுற்றில் தோற்றாலும், இரண்டாவது தகுதிச் சுற்றில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் அணி 3வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. குஜராத் அணியின் சுப்மன் கில் (722 ரன்கள்) மற்றும் சாய் சுதர்சன் (710 ரன்கள்) ஆகிய இருவரும் இந்த சீசனின் ஆரஞ்சு தொப்பிகளுக்கான (Orange Cap) பந்தயத்தில் முன்னணியில் உள்ளனர். அதேபோல, ஊதா நிறத் தொப்பிக்கான (Purple Cap) பந்தயத்தில் குஜராத் அணியின் ககிசோ ரபாடா (28 விக்கெட்டுகள்) மற்றும் ஆர்சிபியின் புவனேஷ்வர் குமார் (26 விக்கெட்டுகள்) இடையே பலத்த போட்டி நிலவுகிறது.

நேருக்கு நேர் மற்றும் நேரலை விபரம்

நேருக்கு நேர் புள்ளிவிபரங்கள் மற்றும் இறுதிப்போட்டியை நேரலையில் காண்பதற்கான முழு விபரங்கள்

ஐபிஎல் வரலாற்றில் இரு அணிகளும் இதுவரை 9 முறை மோதியுள்ள நிலையில், ஆர்சிபி 5 வெற்றிகளையும், குஜராத் 4 வெற்றிகளையும் பெற்று சமபலத்துடன் விளங்குகின்றன. இந்த 2026 சீசனில் இரு அணிகளும் மோதிய 3 போட்டிகளில் ஆர்சிபி இரண்டிலும், குஜராத் அணி தங்களது சொந்த மைதானமான அகமதாபாத்தில் ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. இந்த பரபரப்பான இறுதிப்போட்டி நாளை இரவு 7:30 மணிக்கு ஜியோஹாட்ஸ்டார் செயலியிலும், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் உள்ளிட்ட தொலைக்காட்சிகளிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

Advertisement